

சென்னை: நெடுந்தொலைவுக்கு பயணிக்கும் வகையில், மின்சார வசதியுடன் பழமையான நீராவி எஞ்சின் வடிவிலான ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
உலகின் பழமையான ரயில் இன்ஜினாக கருதப்படும் இஐஆர் 21 கடந்த1855-ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் இன்ஜின் 167 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1909-ம் ஆண்டு வரை இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தது.தற்போது, குடியரசு மற்றும்சுதந்திர தின நாள்களில் இயக்கப்படுகிறது.
உலகில் பயன்பாட்டில் இருக்கும்மிகப் பழமையான ரயில் இன்ஜின் இதுவாகும். தற்போது, இந்த ரயில் இன்ஜின்பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் பராமரிக்கப்படுகிறது.
இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினத்தில் நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரையில் பழமையான நீராவிஇன்ஜின் ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில், நெடுந்தொலைவுக்கு மின்சார வசதியுடன் பாரம்பரிய ரயிலைஇயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக, தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎஃப் இணைந்து செயல்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளன. அதன்படி, பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில்களை மின்சாரத்தில் இயங்கும் வகையில் பெட்டிகளை புதிய வடிவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நீராவி இன்ஜிகளில் உள்ள பிரச்சினை என்னவென்றால், அதில் நிலக்கரி பயன்பாட்டைப் பொறுத்து அது குறைந்த வேகத்தில் மட்டுமே இயங்கும்.
இதில், மின்சாரத்தில் இயங்கும் ரயில் பெட்டிகள் இணைக்கப்படுவதால், நீண்ட தூரம் வேகமாக பயணிக்க முடியும்.மின்சார பயன்பாடு கிடைக்காத மலைப்பாங்கான ரயில் தடங்களில் நீராவிஇன்ஜினை இயக்க முடியும். பெரும்பாலும் இந்த ரயில் மின்சாரத்தில்தான் இயங்கும்.
இத் திட்டம் இன்னும் எழுத்து வடிவில் தான் உள்ளது. ரயில்வேஅமைச்சக அனுமதி கிடைத்த பிறகு, இந்த பாரம்பரிய ரயில் தயாரிக்கும் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.