Published : 30 Jan 2023 06:51 AM
Last Updated : 30 Jan 2023 06:51 AM

கதி சக்தி திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த குழுக்கள் அமைப்பு

சென்னை: கதி சக்தி திட்டத்தின் கீழ், ரயில்வேயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சென்னை கோட்டத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பயணிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் தொடர்பான திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் ரூ.100 லட்சம் கோடியில் கதி சக்தி திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், புதிய பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படும் எனவும் பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார்.

அதன்படி, உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரயில்வே,சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இணைந்து செயல்படவுள்ளன.

இதற்கிடையில், தெற்கு ரயில்வேயில் ஒவ்வொரு கோட்டத்திலும் உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த அதிகாரிகள் கொண்ட குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சென்னை ரயில்வேகோட்டத்தில் அமைக்கப்பட்ட குழு,பயணிகள் வசதி, போக்குவரத்துமேம்பாடு தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.735 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் மறுசீரமைப்பு செய்வதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளை அவ்வப்போது பார்வையிட்டு, பணிகளை துரிதமாக முடிக்க இக்குழுவின் அதிகாரிகள் அறிவுறுத்த உள்ளார்கள். இதுதவிர, 15-க்கும்மேற்பட்ட நிலையங்களில் மறுசீரமைப்பு பணியை இக் குழு கவனித்து வருகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கதிசக்தி திட்டத்தின்கீழ், 25 ஆண்டுகளுக்குள் உள்கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை உள்பட 6 கோட்டங்களில் கதி சக்தி திட்டத்துக்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கதி சக்தி திட்டத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு மட்டுமல்ல, மற்ற துறைகளின் மேம்பாடும் அடங்கும். பல்வேறு மாதிரி போக்குவரத்துகளை மேம்படுத்த வேண்டும். சென்னைரயில்வே கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டப்பணிகளை இக்குழு கண்காணிக்கிறது.

பணிகளை வேகப்படுத்த அறிவுறுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர். எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.735 கோடியில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x