Published : 30 Jan 2023 07:17 AM
Last Updated : 30 Jan 2023 07:17 AM
சென்னை: சென்னையில் நடைபெற்ற தமிழர்பெருமையை போற்றும் ‘மண்ணும்மரபும்’ கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை மாணவர்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
காந்தி உலக மையம் எனும்சமூகநல அமைப்பு சார்பில் தமிழர்பாரம்பரியத்தை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் ‘மண்ணும் மரபும்’ எனும் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் கடந்த ஜனவரி 27-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த கண்காட்சியில் இயற்கை வேளாண் பொருட்களுக்கான நேரடி சந்தை, சித்த மருத்துவ முகாம், நெல் மற்றும் மரபு விதைகள் காட்சிப்படுத்தல், உணவுத் திருவிழா, பழமையான இசை, போர்க்கருவிகள் காட்சியகம், பனை பொருட்கள் காட்சியகம், பாரம்பரியவிளையாட்டுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர நாட்டுரக கால்நடைகள் அணிவகுப்பு, தெருக்கூத்து, ஒயிலாட்டம் போன்றநாட்டுப்புற கலைகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இவை எல்லாம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. 3 நாட்கள் நடந்தகண்காட்சியை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
இறுதிநாளில் பேராசிரியர் சாந்தகுமாரி எழுதிய ‘வரலாற்று வெளிச்சத்தில் சுதந்திர போராட்டத் தழும்புகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு, கண்காட்சியை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது: இந்த புத்தகத்தை எழுதிய சாந்தகுமாரி எனது கல்லூரி ஆசிரியராவார். தற்போது அமைச்சராக நான் முன்னேறியதற்கு அவரின் வழிகாட்டுதலும் உதவியாக இருந்தது. அதனால் இந்த புத்தகத்தை வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
சுதந்திரப் போராட்ட வரலாற்றை மாணவர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்தநூல் உதவியாக இருக்கும். மேலும்,மாணவர்கள் அனைவருக்கும் புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் நடிகர் தாமு, கல்வியாளர் சேது ஆறுமுகம், பேராசிரியர் சாந்தகுமாரி, காந்தி உலக மையத்தின் நிறுவனர் எம்.எல்.ராஜேஷ், தலைவர் எம்.மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT