Published : 30 Jan 2023 07:29 AM
Last Updated : 30 Jan 2023 07:29 AM
சென்னை: இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மின் நுகர்வோர் தங்களது மின்கட்டணத்தை மின்வாரிய பிரிவு அலுவலகங்கள், அரசு இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள் மற்றும் சில வங்கிகளின் கிளைகளில் செலுத்தலாம்.
இவை தவிர, மின்வாரிய இணையதளம், பாரத் பே உள்ளிட்ட மின்னணு தளங்களிலும் செலுத்தலாம். புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், தற்காலிக இணைப்பு, கட்டண விகிதம் மாற்றம் போன்ற சேவைகளுக்கு இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அவற்றுக்கான கட்டணங்களையும் இணையதளம் மூலமாகவே கட்ட வேண்டும்.
முறைகேடு புகார்: மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் வழங்கப்படும் ரசீதுகள் வண்ணத்தில் இருப்பதுடன் மின்வாரியத்தின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். அதே நேரத்தில், இணையதளத்தில் வழங்கப்படும் ரசீது வெள்ளைத் தாளில் விண்ணப்பதாரர் பெயர், கட்டணம் உள்ளிட்ட சில விவரங்கள் மட்டுமே கணினியில் தட்டச்சு செய்தது போன்று இருக்கும்.
இந்நிலையில், தனியார் பிரவுசிங் சென்டர்களில் மின் கட்டணம் செலுத்தும்போது அவற்றின் உரிமையாளர்கள் சிலர் மின் கட்டணத்தை தங்களது வங்கிக் கணக்குக்குச் செலுத்தி விடுவதாகவும், மின்வாரிய கணக்கில் செலுத்துவதில்லை என்றும் புகார்கள் எழுகின்றன. பாதிக்கப்பட்ட சிலர் மின்வாரியத்தில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மின்வாரியம் இந்த முறைகேடுகளைத் தடுக்கதற்போது மின்கட்டண பிரிவு அலுவலகங்களிலும், இணைய தளத்திலும் செலுத்தும் மின் கட்டணங்களுக்கு ஒரே மாதிரி ரசீது வழங்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT