

மதுரை: மதுரை மாநகராட்சி ட்ரை சைக்கிள்கள், பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து பராமரிக்கப்படாமல் உள்ளதால் தூய்மைப் பணியாளர்கள் தினமும் குப்பையைச் சேகரிப்பதில் சிரமம் அடைகின்றனர்.
மதுரை மாநகராட்சியில் குப்பையை வீடு, வீடாகச் சென்று சேகரிப்பதற்கும், சேகரித்த குப்பையை நுண்ணுயிர் உர தயாரிப்புக் கூடத்துக்குக் கொண்டு செல்லவும் ட்ரை சைக்கிள், பேட்டரி வாகனங்கள், லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் லாரிகள் பழுதடைந்தால் உடனுக்குடன் பழுது பார்த்து பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், ட்ரை சைக்கிள், பேட்டரி வாகனங்கள் பழுதடைந்தால், அவற்றை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது. கடந்த வாரம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டை கவுன்சிலர்கள் பலரும் முன்வைத்தனர். ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், உடனடியாக சுகாதார நகர் நல அலுவலரை அழைத்து பழுதடைந்த ட்ரை சைக்கிள், பேட்டரி வாகனங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
பழுது நீக்கம் செய்ய முடியாத வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்களை வாங்கவும் அறிவுறுத்தினார். நகரில் குப்பை சேகரிப்பதற்குப் போதிய ட்ரை சைக்கிள், பேட்டரி வாகனங்கள் இல்லாத நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கான கையுறைகள், முகக்கவசம் போன்றவையும் பற்றாக்குறையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் அவை ஒவ்வொன்றாகப் பழுதடைந்து வருகின்றன. பல வாகனங்களில் பேட்டரி காலாவதியாகி புதிய பேட்டரிகள் வாங்கப்படவில்லை. பேட்டரிக்கான கியாரண்டி சான்று, அது இல்லாவிட்டால் புதிதாக வாங்குவதற்கான பராமரிப்புச் செலவினங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் தயார் செய்து மேயர், ஆணையர் கவனத்துக்குக்கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், இந்தக் குறைபாடுகளை கீழ்நிலை சுகாதாரத் துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்வதில்லை. அப்படியே கொண்டு சென்றாலும், அவை மாநகராட்சி ஆணையர், மேயரை சென்றடைவதில்லை என புகார் கூறப்படுகிறது.
பேட்டரி வாகனங்கள் பழுதடைந்துள்ளதால் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் அண்மைக்காலமாக குப்பை தேங்குவது அதிகரித்துள்ளது. எனவே, இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.