

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
காரைக்குடியில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி வீட்டில் பெரியார் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல் துறையினர் தடுத்து நிறுத்தியது வருத்தத்துக்குரியது. இதை திமுக அரசுக்கான அவமானமாக கருதுகிறேன். மீண்டும் அங்கே பெரியாரின் சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தோம். அங்கு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இரட்டை தொட்டி வேண்டாம். அனைத்து சமூக மக்களுக்கும் ஒரே பொதுவான தொட்டியை அமைக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது.
வேங்கைவயல் சம்பவத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதுவரை அவரிடம் விசாரணை நடத்தாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த பிரச்சினையில் தீர்வுகாணும் வரை மக்களுக்கு உறுதுணையாக விசிக களத்தில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.