

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சென்னை பல்கலைக்கழக உளவியல் துறை சார்பில் “ஆக்கப் பூர்வமான முதலீடு மற்றும் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பிலான கருத்தரங்கின் நிறைவு விழா சென்னை பல்கலைக் கழகத்தில் நேற்று மாலை நடந்தது.
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
இளைஞர்கள் நேர்முக சிந்தனையுடன் செயல்பட வேண்டும். நேரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என அட்டவணையிட்டு அதன்படி தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். படிக்கும் நேரத்தில் படிக்க வேண்டும், விளையாடும் நேரத்தில் விளையாட வேண்டும், நண்பர்களுடன் எப்போது நேரம் செலவிட வேண்டுமோ அப்போது செலவிட வேண்டும். இது ஆற்றலை மேம்படுத்தும்.
வெற்றி தோல்விகளை விளை யாட்டு வீரர்கள்போல் எதிர் கொள்ள வேண்டும். வாழ்க்கை ஒரு மாரத்தான் அல்ல. நமக்கான வாய்ப்பு நம் முன்னே இருக்கிறது. அதை அடையாளம் கண்டு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்களின் நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்.
திறமையை வீணடித்து விடக்கூடாது. இளைஞர்களின் திறமை எப்போதும் தீர்ந்துபோகாது. அதை தூண் டிக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். மனம்தான் உடலின் அடித்தளம். ஆக்கப்பூர்வமான சிந்தனை அவசியம் என்றார்.
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் பி.டேவிட் ஜவகர், மன நல மருத்துவர் டாக்டர் எஸ்.மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.