ரயில்களில் விநியோகிக்கப்படும் உணவு பொருட்களின் விலை திடீர் உயர்வு

ரயில்களில் விநியோகிக்கப்படும் உணவு பொருட்களின் விலை திடீர் உயர்வு
Updated on
1 min read

சென்னை: ரயில்களில் விநியோகிக்கும் உணவு பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிருப்திஅடைந்துள்ளனர்.

இந்திய ரயில்வேயில் தினசரி 14,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ரயில் பயணிகளுக்கான உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப் பணியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ரயில்களில் விநியோகம் செய்யப்படும் இட்லி, சாதம் வகை உணவுகள் உள்பட 70 உணவு பொருட்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு கடந்த 26-ம்தேதி முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும், இது குறித்து எந்த முன்அறிவிப்பையும் ஐஆர்சிடிசி தரப்பில் வெளியிடவில்லை. இதனால், பயணிகள் அதிருப்தியடைந் துள்ளனர்.

புதிய விலை பட்டியல்படி, இரண்டு இட்லி ரூ.20; இரண்டு சப்பாத்தி ரூ.20, ஒரு வடை ரூ.15, பிரெட் சான்வெட்ஜ் ரூ.20, இரண்டு சமோசா ரூ.20, ரவா,கோதுமை, சேமியா உப்புமா தலா ரூ.30, மசாலா தோசை ரூ.50, புளி, எலுமிச்சை, தயிர், தேங்காய் சாதம் தலா ரூ.50, வெஜ் நூடுல்ஸ் ரூ.50, வெஜ் பிரைடு ரைஸ் ரூ.80, பன்னீர் சில்லி, மஞ்சூரியன் தலா ரூ.100, இரண்டு அவித்த முட்டை ரூ. 30, சிக்கன் சான்வெட்ஜ் ரூ.50, முட்டை பிரைடு ரைஸ், நுாடுல்ஸ் தலா ரூ.90, சிக்கன் 65 ரூ.100, பொறித்த மீன், குழம்பு ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனதா சாப்பாடு: இனிப்பு வகைகளில் ஜிலேபி ரூ.20, குலோப் ஜாமுன் ரூ.20, கேசரி ரூ.20 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில்களில் விநியோகம் செய்யப்படும் ஸ்டேன்டர்டு மற்றும் ஜனதா சாப்பாட்டில் எந்த விலை மாற்றமும் செய்யவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in