

சென்னை: நடிகர் ரஜினி காந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் பதிவை உரிய அனுமதியின்றி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினியின் சார்பில் வழக்கறிஞர் எச்சரித்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினி சார்பில் வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி விடுத்துள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: அனைவர் மத்தியிலும் நன்மதிப்பு: நடிகர் ரஜினிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கென திரையுலகிலும், பொது வாழ்விலும் தனிப்பட்ட நன்மதிப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது.
இந்நிலையில் சில தனி நபர்கள், அமைப்புகள், தனியார் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் தங்களைப் பிரபலப் படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் வணிக நோக்கில் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் நடிகர் ரஜினியின் பெயர், புகைப் படம் மற்றும் குரலை உரிய அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றன.
இவ்வாறு நடிகர் ரஜினியின் உரிய அனுமதியின்றி அவருடைய பெயர், புகைப்படம் மற்றும்குரல் பதிவைப் பயன்படுத்துவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என அதில் எச்சரித்துள்ளார்.