

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வதால், அதன் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக் குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இதில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித் தனியே வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில் கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமியின் வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் நேற்று முன்தினம் ஆஜராகி, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்”என்று முறையிட்டார்.
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, இது தொடர்பாக பழனிசாமி தரப்பில் நாளை (ஜன.30) மீண்டும் முறையீடு செய்ய உள்ளனர். அதன் மீதான விசாரணை நடை பெற உள்ளது.