

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்ட வேலைநாட்கள் அதிகரிப்பு மற்றும் கூலித்தொகை உயர்வை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் என்.பெரியசாமி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்தும் போது நிதி பற்றாக்குறை உள்ளிட்டவை இருந்த போதிலும், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, வறுமைக் கோட்டுக்கு கீழ்இருந்த ஊரக பகுதியைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய அரசோ கடந்த 8 ஆண்டுகளில் இத்திட்டத்தின் பிரதான நோக்கத்தை அடைய குறைந்த அளவிலான முயற்சியையே முன்னெடுக்கிறது. இத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவதோடு ஒதுக்கப்பட்ட நிதியும் பயன்படுத்தவில்லை.
கரோனா காலத்தில் (2020-21)ஒருவருக்கு சராசரியாக 12 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார வளர்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய நடைமுறையால் இந்தியாவின் நீடித்தவளர்ச்சிக்கான இலக்கை அடைவதிலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
எனவே, வரும் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கும் வகையிலும், திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தும் வகையிலும் போதிய நிதியை ஒதுக்க வேண்டும். மேலும் ஓராண்டுக்கு 250 வேலை நாட்கள் என்பதையும் நாள் ஒன்றுக்கு ரூ.700 ஊதியம் என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.