திருப்பூர் | தமிழக தொழிலாளியை வடமாநிலத்தவர் தாக்கியதாக தவறான செய்தி - வலைதளத்தில் பதிவிட்டவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை

திருப்பூர் | தமிழக தொழிலாளியை வடமாநிலத்தவர் தாக்கியதாக தவறான செய்தி - வலைதளத்தில் பதிவிட்டவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் தமிழக தொழிலாளியை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதாக, சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டது குறித்து விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

திருப்பூர் மாநகரில் தமிழக தொழிலாளியை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி பரவி வருகிறது. 2 வாரங்களுக்கு முன்பு இருவர் தேநீர் குடிக்க சென்றபோது ஏற்பட்ட பிரச்சினை இது. இதில் யாருக்கும் காயமோ? பாதிப்போ இல்லை.

இதை, தற்போது நடைபெற்றதுபோல சித்தரித்து பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள 2 தனிப்படை அமைத்துள்ளோம்.

சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து, ஒரு தனிப்படையும், சமூக வலைதளங்களில் தவறாக தகவல் பதிவிட்டவர்கள் குறித்து சைபர் கிரைம் தனிப்படையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்" என்றார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஏஐடியூசி சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். நடராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதம்: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழர்களை தாக்கி விரட்டுவதாக செய்தி பகிரப்படுகிறது. இதனால் தமிழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படும். திருப்பூரின் தொழிலும், தொழிலாளர் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் என கருதுகிறோம். திருப்பூர் மாநகரில் பல மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களை முறைப்படுத்தும் வகையிலும், அனைத்து தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்கள் குறித்த முழுவிவரங்களை சேகரித்து ஆவணப்படுத்தி, உரிய அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.

திருப்பூரில் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையிலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையிலும் மக்கள் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு அமைதி குழுவை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்து முன்னணியின் மாநிலதலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தமிழர்கள் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. திருப்பூரில் தொடர்ந்து வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் போர்வையில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசம் மற்றும் வெளிநாட்டினரை கைது செய்துநாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். தமிழர்கள் மீது யார் தாக்குதல் நடத்த முற்பட்டாலும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்த்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in