Published : 29 Jan 2023 07:40 AM
Last Updated : 29 Jan 2023 07:40 AM
சென்னை: படைப்பாளிகள் விமர்சனங்களைக் கண்டு பயந்து ஒதுங்கிவிடாமல் இந்த சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும் என தான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் வழக்கறிஞர் சுமதி ஏற்புரை நிகழ்த்தினார்.
ஜீரோ டிகிரி பதிப்பகம் சார்பில் வழக்கறிஞர் சுமதி எழுதிய காலதானம் என்ற சிறுகதை தொகுப்புநூல் வெளியீட்டு விழா மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நேற்று நடைபெற்றது. ஜீரோ டிகிரி பதிப்பக பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் வரவேற்றார். நிகழ்வில் நூலை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வெளியிட திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான வஸந்த் எஸ்.சாய் பெற்றுக் கொண்டார்.
‘கால தானம்' நூல் குறித்து எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பேசும்போது, “பொதுவாக எழுத்தாளர்கள் மத்தியில் தீவிர எழுத்து, ரஞ்சக எழுத்து என இரு தரப்பு உள்ளது. சமூகத்துக்கு எது தேவையோ அதை ரஞ்சகமான பாணியில் வழக்கறிஞர் சுமதி தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.
திரைப்பட இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் பேசும்ேபாது, “இந்த நூலின் மூலமாக வழக்கறிஞர் சுமதி தனக்கான உலகில் நிதர்சனமாக வாழ்ந்துள்ளார். வழக்கறிஞராக வெற்றி பெற்ற சுமதி, கல் மண்டபம் மூலமாக ஜொலித்தார். தற்போது காலதானம் மூலமாக மீண்டும் எழுத்தாளர் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்” என்றார். நிகழ்ச்சியில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர்கள் அகர முதல்வன், செந்தில் ஜகன்னாதன், ஜா.ராஜகோபாலன் ஆகியோர் நூலை பல்வேறு கோணங்களில் விமர்சித்துப் பேசினர்.
ஏற்புரையாற்றிய நூலாசிரியர்வழக்கறிஞர் சுமதி, “பொதுவாக படைப்பாளிகள் விமர்சனங்களைக் கண்டு பயந்து ஒதுங்கிவிடாமல் இந்த சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு, அதைநேர்மறை எண்ணத்துடன் எதிர்கொண்டு, வெற்றிப்படிக்கற்களாக மாற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். அதுவும் பெண்எழுத்தாளர்கள் என்றால் அதிகம்உழைக்க வேண்டும். அதைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்” என்றார். நிகழ்ச்சியை த.திருமாறன் தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT