Published : 29 Jan 2023 04:20 AM
Last Updated : 29 Jan 2023 04:20 AM

ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் பிப்.1-ம் தேதி வருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு

ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் பிப்.1-ம் தேதி மாமல்லபுரம் வருவதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மாமல்லபுரம்: ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் பிப்.1-ம்தேதி மாமல்லபுரம் வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் குறித்து தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி வழங்கப்பட்டது. இதனால் டிசம்பர்2022 முதல் நவம்பர் 2023 வரை200-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் நாடு முழுவதும் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகிறது. இதன்படி சென்னையில் ஜன.31 முதல் பிப்.2-ம் தேதி வரை முதலாவது கல்விக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில்,உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதைத் தொடர்ந்து பிப். 1-ம் தேதி இவர்கள் மாமல்லபுரம் சுற்றுலா வருகின்றனர். அங்கு மாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசிக்கின்றனர்.

இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து, வெளிநாட்டு பிரதிநிதிகளின் உடல் நலம் மற்றும் பாகாப்பை கருத்தில் கொண்டு, மாமல்லபுரம் அருகில் உள்ளகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து கலைச் சின்ன வளாகங்களில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதா என அணுமின் நிலைய தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் புராதன சின்னங்களின் வளாகத்தில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை பார்வையிட வசதியாக தொல்லியல் துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, நேற்று தொழில் துறை கூடுதல் தலைமைசெயலாளர் கிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், ஜி20 மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சைதான்யா, செங்கல்பட்டு மாவட்டஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத்,செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பிரதீப், தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இக்குழுவினர் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் வருகைக்காக எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, போலீஸாரை எந்தெந்த இடத்தில் பணியமர்த்துவது, கடற்கரை பகுதிகளை கண்காணிப்பது, எந்த சாலை வழியாக பிரதிநிதிகளை அழைத்து வருவது, தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பது, கிராமிய மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, கைவினை பொருட்களின் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், தாசில்தார் பிரபாகரன், சுற்றுலா அலுவலர் சக்திவேல், உணவு பாதுகாப்பு நியமனஅலுவலர் அனுராதா, செயல் அலுவலர் கணேஷ், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x