ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரிகளில் ஜிபிஎஸ் கருவி: உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரிகளில் ஜிபிஎஸ் கருவி: உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்
Updated on
1 min read

‘‘ரேஷன் பொருட்கள் கடத்து வதைத் தடுக்க, அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும்’’ என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் துக்குப் பதில் அளித்து அமைச்சர் காமராஜ் பேசியதாவது:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் தரம் தொடர்பான குறைகள் குறித்து தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. இந்த சேவை அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.39.72 லட்சத்தில் விரிவுபடுத்தப்படும்.

காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் நெல், மழை மற்றும் பனிப்பொழிவால் பாதிக்கப்படுகிறது. இதனால் நெல்லின் ஈரப்பதம், கொள்முதல் செய்வதற்கேற்ற அளவைவிடக் கூடுதலாக இருக்கிறது. எனவே, அறுவடையாகும் நெல்லை உலர்த்த, ஏற்கெனவே சொந்தக் கட்டிடங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலேயே நடப்பாண்டில் ரூ.8 கோடியில் 100 நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 500 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். கன்னியாக்குமரி, கோவை, திருநெல்வேலி, வேலூர், தேனி, தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள், பிற மாநிலங்களுக்கு கடத்தப் படுவதைத் தடுக்க அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் அதன் போக்குவரத்தைக் கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும்.

பொதுமக்களிடம் கனிவாக, நயமாக பழகவும், பொது விநி யோகத் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் இலவச அரிசி போன்ற அனைத்து அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர் களுக்கு பணித்திறனை மேம்படுத்த ரூ.15 லட்சத்தில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

அதிக பொருட்செலவு மற்றும் கடின உடல் உழைப்புடன் உற்பத்தி செய்த உணவுப் பொருட்கள் வீணாவதைத் தடுக்க நுகர்வோருக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும். உணவு தானியங்களைப் பாதுகாக் கும் சேமிப்பு கிடங்குப் பணியாளர் களுக்கு ரூ.30 லட்சத்தில் தரக்கட்டுப்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியா வசியப் பொருட்களை கடத்து வோரையும் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளையும் திறம்பட கட்டுப்படுத்துவதற்கு “குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிப்பு கட்டமைப்புக்குள் கொண்டு வருதல்” குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புல னாய்வுத் துறையில் அமல்படுத் தப்படும். விவசாய விளை பொருட் களை பாதுகாப்பது, சேமிப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in