Last Updated : 24 Dec, 2016 09:00 AM

 

Published : 24 Dec 2016 09:00 AM
Last Updated : 24 Dec 2016 09:00 AM

கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திறப்பு விழா: இந்தியா - இலங்கையிலிருந்து 250 பக்தர்கள் பங்கேற்பு

கச்சத்தீவில் நேற்று நடைபெற்ற அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து 250 பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் சேதுபதி மன்னர் களுக்கு சொந்தமாக இருந்தது கச்சத்தீவு. இதை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் மீன்பிடிக்க பயன்படுத்தி வந்தனர். ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர் 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயத்தை நிறுவினர். பின்னர் 1974-ம் ஆண்டு இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தப்படி புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே 8-ம் தேதி கச்சத்தீவில் இலங்கை அரசு சார்பில் அந்நாட்டு கடற் படை உதவியுடன் ரூ.1 கோடி மதிப்பில் புதிய அந்தோணியார் தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டிடப் பணிகள் முடிவடைந்து டிசம்பர் 7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து ஆலய திறப்பு விழாவை இலங்கை அரசு ஒத்திவைத்தது. பின்னர் டிச.23-ம் தேதி தேவாலயம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க தங்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை யேற்ற மத்திய அரசு, இந்தியா விலிருந்து 100 பேரை அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தது. அதற்கு இலங்கை ஒப்புக்கொண்டது.

இதையடுத்து, நேற்று அதி காலையில் ராமேசுவரம் பங்குத் தந்தை சகாய ராஜ் தலைமையில் பங்குத்தந்தைகள், மீனவ சங்கத் தலைவர்கள், மீனவர்கள் உட்பட 82 பேர் 3 படகுகளில் கச்சத்தீவு புறப்பட்டுச் சென்றனர். அதே போன்று நெடுந்தீவு மற்றும் யாழ்ப் பாணத்திலிருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெடுந்தீவு பங்குத்தந்தை ஜெயரஞ்சன் தலைமையில் புறப்பட்டு கச்சத் தீவை வந்தடைந்தனர்.

திறப்பு விழா

கச்சத்தீவில் புதிய அந்தோணி யார் ஆலயத்தின் அர்ச்சிப்பு நிகழ்ச்சி யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் தலைமையில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலிகளை ராமேசுவரம் பங்குத்தந்தை சகாயராஜ் மற்றும் நெடுந்தீவு பங்குத்தந்தை ஜெயரஞ் சன் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

புதிய ஆலயத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே, இந்திய துணைத் தூதர் நடராஜன், இலங்கை கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். ராமேசுவரம், நெடுந்தீவு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து கலந்து கொண்ட பக்தர்கள் பரஸ்பரம் வாழ்த் துகளை பறிமாறிக் கொண்டனர். பின்னர், இந்தியாவிலிருந்து சென்ற 82 பேரும், மாலை 4 மணியளவில் ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்துக்கு திரும்பினர்.

விழாவில் கலந்துகொண்ட மீனவப் பிரதிநிதி எம்ரிட் கூறியதாவது:

ஆலயம் திறந்தபின் 20 நிமிடங் கள் தாமதமாகவே கச்சத்தீவுக்கு போய்ச் சேர்ந்தோம். திருப்பலி நிகழ்வுகளில் கலந்துகொண்டோம். ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு திருவிழா, வரும் மார்ச் இரண்டாவது வாரம் நடைபெற உள்ளது. அந்த விழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து பயணிகள் செல்ல வசதியாக கப்பல் ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர் களை வரும் பொங்கல் பண்டி கைக்கு முன்னதாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x