

சிறார் இலக்கியத்தில் சாதனை படைத்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆர்.வி. அவருடைய பிறந்த நாளையொட்டி (டிச.6) ஆர்.வி-யின் பங்களிப்பு குறித்துப் பகிர்ந்துகொள்கிறார், அவருடைய மருமகனும் எழுத்தாளருமான மாயூரன் (கே.குருமூர்த்தி):
ஆர்.வி-யினுடைய வாழ்க்கையைப் பற்றி..?
1918 டிசம்பர் 6 அன்று திருத்துறைப் பூண்டியில் பிறந்தவர் ஆர்.வேங்கட ராமன் என்ற இயற்பெயர் கொண்ட ஆர்.வி. சுதந்திரப் போராட்ட வீரரான இவர், 1941-ல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
எழுத்துத் துறை மற்றும் இதழியல் வேலையில் எப்போதிலிருந்து ஈடுபடத் தொடங்கினார்?
‘ஆனந்த விகடனும், கல்கியின் எழுத்துகளும் என் இலக்கியப் பசிக்குத் தீனி போட்டன. என் இந்தத் துடிப்புக்கு என் நண்பன் சீனிவாசனும் ஒரு காரணம்’ என ஆர்.வி குறிப்பிட்டிருக்கிறார்.
‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆசிரியர் கே.சந்தானம் ஆர்.வி-யின் எழுத்தாற்றலைக் கண்டு கல்கியிடம் அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு ‘கலைமகள்’ ஆசிரியர் கி.வா.ஜ-வின் தூண்டுதலால் அங்கேயே வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்துகொண்டே விகடன், கல்கி, சுதேசமித்திரன் இதழ்களில் எழுதி வந்தார். புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா போன்ற மணிக்கொடி எழுத்தாளர்களைக் கலைமகளில் எழுத வைத்த பெருமை அவரையே சேரும். அகிலனுடன் இணைந்து கலைமகளில் அவர் எழுதிய கடித வடிவ குறுநாவல், தமிழில் புது முயற்சி.
ஒரு சிறார் இதழுக்கு நீண்ட காலமாக இவரே ஆசிரியராக இருந்ததே ஒரு சாதனைதானே..?
அந்தக் காலத்தில் அணில், ஜில்ஜில், சங்கு, பாலர் மலர், டமாரம், டிங்டாங், கல்கண்டு, கரும்பு, பூஞ்சோலை என பல்வேறு சிறார் இதழ்கள் வெளிவந்தன. 1950-ல் கலைமகள் நிறுவனம் சிறார்களுக்கான ‘கண்ணன்’ இதழைத் தொடங்கியதில் இருந்து 22 ஆண்டுகள் கடைசி இதழ் வரை ஆர்.வி-தான் ஆசிரியராக இருந்தார்.
கண்ணன் இதழைப் பற்றி...
சிறார் இதழுக்கே நல்ல எடுத்துக்காட்டாக விளங்கிய ‘கண்ணன்’, சிறார்களின் குறும்பு கள், சேட்டைகள், உற்சாகம், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றைப் பின்னணி யாகக் கொண்டு குழந்தைகளின் உள்ளங் களில் குதூகலத்தை ஏற்படுத்தும்படியான சிறுகதை, கவிதை, அறிவியல் கட்டுரை, தொடர் கதைகள், சித்திரக் கதை, விடுகதை, வெட்டி ஒட்டும் படங்கள், வினா-விடைகள், பாலர் கவியரங்கம், ஆஹா ஓஹோ, துணுக்குகள் என சிறுவர் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்தது ‘கண்ணன்’.
'கண்ணன்' இதழில் வெளிவந்த கதைகள் ‘கண்ணன் கதைகள்’ என்கிற பெயரில் 12 பாகங்களாகவும், ஓரங்க நாடகங்கள் ‘கண்ணன் நாடகங்கள்’ என்ற தொகுப்பாக வும் ‘அநுராகம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்புப் பணியில் நானும் இணைந் திருந்தேன்.
இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்ததில் ஆர்.வி-யின் பங்கு என்ன?
‘கண்ணன்’ இதழில் ராஜாஜி, மு.வ., பெரியசாமித் தூரன், த.நா.குமாரசாமி, கி.வா.ஜ, பெ.நா.அப்புசாமி, தி.ஜ.ர, அழ.வள்ளியப்பா போன்ற ஜாம்பவான்களு டன் பல இளம் எழுத்தாளர்களையும் எழுத ஊக்குவித்தார். அவர்களில், பிரபல எழுத் தாளர்களான அம்பை, ஆதவன், ஜே.எம்.சாலி, பூவண்ணன், ஜோதிர்லதா கிரிஜா, ரேவதி, சாருகேசி, இனியவன், இளையவன், பூரம், ரமணீயன், லெமன், வாதூலன் என பலர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிறார் இலக்கியத்திலும் சிறார் இதழியலிலும் அவருடைய சாதனைகள் என்னென்ன?
தமிழில் சித்திரக் கதைத் தொடரை அறிமுகப்படுத்தியவர் ஆர்.வி.தான். ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் தொடர்கதைகளை எழுதியவர். அசட்டுப் பிச்சு, லீடர்மணி, ஜக்கு, ஜம்பு, புதியமுகம், சந்திரகிரிக் கோட்டை, காலக் கப்பல் போன்ற அவருடைய சிறார் நூல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றவை. அணையா விளக்கு, குங்குமச் சிமிழ், சந்திரகிரிக்கோட்டை போன்ற நூல்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழக அரசின் விருதுகளும் தங்கப் பதக்கங்களும் கிடைத்துள்ளன. தமிழில் 30 நாவல்கள், 8 குறுநாவல்கள், 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், சிறார்களுக்காக 50 நூல்கள், வானொலி நாடகங்கள், மொழிபெயர்ப்பு என ஆர்.வி-யின் படைப்புப் பட்டியல் நீளமானது.