

பிளஸ் 2 மாணவர்கள் குடும்ப சூழலை உணர்ந்து பொறுப்புடன் படித்து அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்று ‘தி இந்து தமிழ்’ நாளிதழ், எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய “இனிது இனிது தேர்வு இனிது” மாணவர் திருவிழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “இனிது இனிது தேர்வு இனிது” என்ற சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே விவிஏ அண்ட் எம்ஏஎம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழும், சென்னையை அடுத்த பூந்தமல்லி எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியின் தலைவர் கே.ராமதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா. மார்ஸ், கல்லூரியின் முதல்வர் எம்.செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணி யன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிப் பேசியதாவது: மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை, உயர்கல்வியை நிர்ணயிப்பது பிளஸ் 2 பொதுத்தேர்வுதான். எனவே, இத்தேர்வு மாணவர்கள் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் ஆகும். இத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால்தான் நல்ல கல்லூரிகளில் படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழ், எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து விழுப்புரத்தில் நேற்று நடத்திய ‘இனிது இனிது தேர்வு இனிது’ மாணவர் திருவிழாவில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகள். |
மாணவர்கள் இத்தேர்வுக்கு எந்த அளவுக்கு படிக்கிறார்களோ, எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. எனவே, இந்த காலத்தில் கடினமாகவும் திட்டமிட்டும் தேர்வுக்கு படிக்க வேண்டும்.
கடும் போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் மிகச்சிறந்த கல்லூரிகளில் சேர முடியும். குறிப்பாக அரசு பொறியியல் கல்லூரிகளிலும், அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும்.
தற்போது தனியார் பள்ளி மாணவர்களைப் போல அரசு பள்ளி மாணவர்களும் படிப்பில் சாதித்து வருகிறார்கள். அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் குடும்ப நிலையை மனதில் வைத்து படிக்க வேண்டும்.
கலை அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அனைவரும் பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேரவே விரும்புகின்றனர்.
பிளஸ் 2 தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், மாணவர்கள் இந்த காலத்தில் நன்கு திட்டமிட்டு நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறேன்.
விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இதற்காகப் பாடுபட்ட ஆசிரியர்களை பாராட்டுகிறேன் என்று ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பேசினார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சா.மார்ஸ் பேசும்போது கூறியதாவது: பிளஸ் 2 தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், மாணவர்களுக்கு வழிகாட்டவும், அவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. பிளஸ் 2 தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
தேர்வுக்கு இருக்கும் 2 மாதங்களும் மாணவர்கள் கவனமாக பாடங்களைப் படிக்க வேண்டும். தற்போது முழு பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கும். எனவே, திட்டமிட்டு பாடங்களை மீண்டும் மீண்டும் படித்தால் நல்ல மதிப்பெண் பெற முடியும். இந்த ஆண்டு புதிதாக நீட் என்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு மாணவர்களை சலனப்படுத்தியிருக்கலாம்.
நீட் தேர்வை தமிழில் எழுதும் வாய்ப்பும் தரப்பட்டிருக்கிறது. எனவே, நீட் தேர்வை நினைத்து மாணவர்கள் பயப்பட வேண்டாம். பாடங்களை நல்ல முறையில் படித்தால் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் சேரலாம் என்று அவர் கூறினார்.
கல்வியாளர் தா.நெடுஞ்செழியன் தனது சிறப்புரையில், “மாணவர்கள் பள்ளி தேர்வில் மட்டுமின்றி பல்வேறு நுழைவுத்தேர்வுகளையும் பயமின்றி எழுத வேண்டும். அப்போதுதான் சிறந்த அனுபவம் கிடைக்கும்” என்றார். வித்யா கல்வி மைய கவுரவ இயக்குநர் எஸ்.பி.சுப்பிரமணியன், கல்வி தொடர்பான ஆலோசனைகளை மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களைப் பற்றி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் தகவல்களை வழங்கினார்.
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை எளிதாக படிக்கும் முறை குறித்தும், 200-க்கு 200 மதிப்பெண் எடுப்பதற்கான உத்திகள் குறித்தும் பேராசிரியர்கள் ஆர்.மணிமாறன், ஏ.திருமாறன், ஏ.பரீத் அஸ்லாம், என்.குமாரவேல் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியின் எலெக்ட்ரிக்கல்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் துறையின் தலை வர் பேராசிரியர் ஆர்.சங்கர் அனைவருக் கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து’ குழுமம் மற்றும் எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியுடன், புதுச்சேரி வர்மா ஆயுர்வேதா மருத்துவ மனையும் இணைந்து நடத்தியது.
1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், அனைவருக்கும் கணிதம், அறிவியல் பாடங்களின் பார்முலா புத்தகம் மற்றும் முக்கிய வினாக்கள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி சார்பில் மினி அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில், மாணவர்கள் தயாரித்த அறிவியல் கண்டுபிடிப்பு மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்களும் பார்வையிட்டு பல்வேறு சந்தேகங்களை கேட்டறிந்தனர். கல்வியாளர் நெடுஞ்செழியனின் பேச்சுக்கு அரங்கில் பலத்த வரவேற்பு இருந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் பேச எழுந்ததும் மாணவர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் எழுந்தது. அவர் அடிக்கடி அரசுப் பள்ளிகளுக்கு திடீர் ஆய்வு செய்து மாணவர் களிடம் உற்சாகமூட்டும் வகையில் பேசிவருவதே இதற்குக் காரணம் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.