Published : 21 Jul 2014 03:38 PM
Last Updated : 21 Jul 2014 03:38 PM

மின்வெட்டை அறிமுகப்படுத்தியதே திமுக ஆட்சிதான்: முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் எரிசக்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மின்வெட்டை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது திமுக ஆட்சியே என்றார்.

மேலும், விவசாயிகளுக்கு 12 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பேரவையில் முதல்வர் பேசியதாவது: "மின்வெட்டைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதையே இல்லை. ஏனென்றால், மின்வெட்டு என்பதை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான்.

நான் இப்போது மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில், 1991 முதல் 1996 வரை மின்வெட்டு என்ற பேச்சுக்கே தமிழ்நாட்டில் இடமில்லை.

அப்போது மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக, மிகை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தது. அதைப்போலவே, எனது இரண்டாவது ஆட்சிக் காலம்; 2001 முதல் 2006 வரை, தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்போதும் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது.

அதன் பின்னர் தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாடு மின் குறை மாநிலமாக ஆக்கப்பட்டு, தமிழ்நாடு இருளில் தள்ளப்பட்டது.

மீண்டும் 2011-ல் மூன்றாவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தி.மு.க. விட்டுச் சென்ற கடன், சுமை, தி.மு.க. விட்டுச் சென்ற மின்வெட்டு என்ற நிலைமை இருந்தது. இவற்றோடு பகீரத முயற்சி செய்து, போராடி இப்பொழுதுதான் நிலைமையைச் சரிசெய்திருக்கிறோம்.

விவசாயிகளுக்கு மின்வெட்டு என்றார்கள்; இரண்டு மணி நேரம்தான் மின்சாரம் தரப்படுகிறது என்றார்கள்; அப்படியில்லை. விவசாயிகளுக்கு 12 மணி நேரம் தடையில்லா மின்சாரம், மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக உறுப்பினர் பெரியசாமி பேசும்போது, இலவச ஒரு விளக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்று தெரிவித்தார். இது உண்மைக்கு மாறான தகவல் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு என்ற திட்டத்தை 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர் அவர்கள். 1979ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியபோது, மாதம் 2 ரூபாய் 50 காசு எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர், அரசாணை எண் 1705, பொதுப் பணித்துறை, நாள் 18-8-1984-ன்படி, இந்தக் கட்டணம் நீக்கப்பட்டுவிட்டது என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எனவே, செய்யாத ஒரு செயலுக்கு உரிமை கொண்டாட வேண்டாமென்று தி.மு.க. உறுப்பினரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதிக கட்டணம் கொடுத்து இந்த ஆட்சியில் மின்சாரத்தை வெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என்றும் திமுகவினர் குற்றம்சாட்டினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒட்டுமொத்த விலைவாசி குறைவாக இருந்தபோது, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், இப்போது, விலைவாசி மூன்று மடங்கு பெருகியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் இந்தச் சூழ்நிலையில், குறைந்த விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x