

சொத்து வரி: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்: சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் 24 ஆண்டுகளுக்கு பிறகும், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகும் சொத்துவரி பொது சீராய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஏற்று, 7 லட்சத்திற்கும் அதிகமான சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை முழுமையாக செலுத்தி சென்னை மாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் பங்கேற்றுள்ளனர்' என்று தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் ஆலோசனை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தனர்.
இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தால், உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.
இதனிடையே,“எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமையும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ம.பி.யில் 2 போர் விமானங்கள் விபத்து: விமானி ஒருவர் உயிரிழப்பு: மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார். விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும், இன்னொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்பதும் பாதுகாப்புப் படையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, ராஜஸ்தானின் பரத்பூரில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தின் விமானி தப்பியதாகத் தெரிகிறது.
“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை” - பிரதமர் மோடி: ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற பகவான் ஸ்ரீதேவநாராயணனின் அவதார விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளாக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள புறக்கணிக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க நாடு முயற்சி எடுத்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மந்திரத்துடன் நாங்கள் செயல்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை: அமித் ஷாவுக்கு கார்கே கடிதம்: இந்திய ஒற்றுமை யாத்திரையை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா என்ற பகுதியில் இருந்து சனிக்கிழமை காலை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த யாத்திரையின்போது ராகுலின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டி யாத்திரையை பாதியில் நிறுத்தியது. இந்தச் சூழ்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் யாத்திரையின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலையிட வேண்டும் என்று அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளர்.
இரண்டு நாட்களில் ரூ.18,000 கோடி இழந்த எல்ஐசி: அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவால் எல்ஐசிக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு நாட்களில் மிகப்பெரிய இழப்பை எல்ஐசி சந்தித்துள்ளது. முன்னதாக, அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் மட்டும் அதானி நிறுவனங்களின் மதிப்பு 4 லட்சத்து 20 ஆயிரம் லட்சம் ரூபாய் கோடி சரிந்துள்ளது.
அதானி குழும பங்குகள் சரிவால் எல்ஐசி மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. அதானி குழும நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களில் எல்ஐசி மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நலம் விசாரிக்க வந்த அமைச்சரிடம் நல்லக்கண்ணு கோரிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்பதால் அங்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற அமைச்சரிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்தார்.
“எங்கள் நாட்டின் வளத்திற்கு அல்லாவே பொறுப்பு” - பாகிஸ்தான்: இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், "பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். முந்தைய ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த அழிவுதான் இது என்பது மக்களுக்கும் தெரிந்துவிட்டது. அல்லாவால் பாகிஸ்தானை உருவாக்க முடிந்தது. அதனால் பாகிஸ்தானை பாதுகாத்து, வளர்த்து, வளத்தைத் தருவதையும் அல்லாவே செய்வார்" என்றார்.
செறிவூட்டப்பட்ட அரிசி ஏன்? - தமிழக அரசு விளக்கம்: பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டுவருகிறது என்றும், செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இரும்புச் சத்து மூலம் ரத்தச் சோகையைத் தடுக்கிறது; ஃபோலிக் அமிலமானது கருவளர்ச்சிக்கும் ரத்த உற்பத்திற்கும் உதவுகிறது; வைட்டமின் பி12 ஆனது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ள அரசு, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணோட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.