நதிநீர் பிரச்சினைகளுக்கு புதிய தீர்ப்பாயம் அமைப்பது தமிழகத்துக்கு தீங்கு: பழ.நெடுமாறன்

நதிநீர் பிரச்சினைகளுக்கு புதிய தீர்ப்பாயம் அமைப்பது தமிழகத்துக்கு தீங்கு: பழ.நெடுமாறன்
Updated on
1 min read

நதிநீர் பிரச்சினைகளுக்கு புதிய தீர்ப்பாயம் அமைப்பது தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகள் குறித்தும் விசாரணை நடத்த ஒரே தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி தமிழக விவசாயிகளை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஏற்கெனவே காவிரி, முல்லைப்பெரியாறு ஆகியப் பிரச்சினைகளில் நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகளை கேரளமும், கர்நாடகமும் மதிக்க மறுக்கின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கிணங்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இதுவரை மத்திய அரசு முன்வரவில்லை. இந்த நிலைமையில் மீண்டும் இந்தப் பிரச்சினைகளை புதிய தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்வது தமிழகத்திற்கு பெரும் தீங்கு விளைவிப்பதாகும்.

1956ஆம் ஆண்டு சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் இல்லை. மாறாக அந்தச் சட்டத்தின்படி மத்திய அரசு செயல்படவேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க மறுக்கிற கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமே தவிர, பிரச்சினையை புதிய தீர்ப்பாயத்திற்கு அனுப்புங்கள் என்று கூறுவது மத்திய அரசின் கையாளாகாதத் தன்மையைக் காட்டுகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in