கிருஷ்ணகிரி நகராட்சி டெண்டர் முறைகேடு: 4 அலுவலர்கள் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி நகராட்சி டெண்டர் முறைகேடு: 4 அலுவலர்கள் சஸ்பெண்ட்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் டெண்டரில் முறைகேடு செய்ததாக 4 அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் கடைகள், கட்டணக் கழிப்பிடம், நகராட்சிக் கட்டிடங்கள் குத்தகை தொடர்பாக டெண்டர் விடப்படும். இதில் குத்தகை தொகையை குறைவாகப் பதிவு செய்தும், உரிமைத்தொகையை சரிவர செலுத்தாமலும் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாக உயரதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, இளநிலை உதவியாளர் சரஸ்வதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி தினசரி மார்க்கெட் சுங்கம் வசூல், புதிய பேருந்து நிலையக் கட்டணக் கழிப்பிடம், பழைய பேருந்து நிலையக் கட்டணக் கழிப்பிடம் உள்ளிட்டவை தொடர்பான டெண்டர்களிலும் முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. குத்தகை தொகை குறைவான அளவில் கோரப்பட்டும், உரிமைத் தொகைசெலுத்தப்படாமலும் இருந்ததால், நகராட்சிக்கு ரூ.60 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், முறைகேடுகளில் ஈடுபட்டதாக நகராட்சிப் பொறியாளர் சரவணன், இளநிலை உதவியாளர் ஞானசேகரன், உதவியாளர் புஷ்பராணி ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், ஏற்கெனவே விடப்பட்ட டெண்டரிலும் முறைகேடுகள் நடத்திருப்பதால், அப்போதைய கிருஷ்ணகிரி நகராட்சிப் பொறியாளரும், தற்போதைய ஜோலார்பேட்டை நகராட்சிப் பொறியாளருமான கோபுவும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், தினசரி மார்க்கெட், கட்டணக் கழிப்பிட வசூல் உள்ளிட்டவற்றை நகராட்சிப் பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும். வசூல் தொகையை நகராட்சிநிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மறு ஏலம் விடப்படும் வரைஇந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in