

‘வார்தா’ புயலால் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நேற்று சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியது. விமானங்கள் தரையிறங்குவது மற்றும் புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சுமார் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மோசமான வானிலையால் சென்னையில் தரையிறங்க வந்த 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்ல இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை சென்னையை நோக்கி இயக்க இருந்த அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் ரத்து செய்து மூடப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விமான நிலையம் வந்திருந்த பயணிகள் அருகில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஓடுபாதைகளில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றும் பணியில் நேற்று இரவு முழுவதும் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை 8.30 மணி அளவில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கியது. பல்வேறு நகரங்களில் இருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்கின. சென்னையில் இருந்தும் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.