Published : 28 Jan 2023 06:13 AM
Last Updated : 28 Jan 2023 06:13 AM

சொத்து விவரங்களை முறையாக ஆவணப்படுத்த வேண்டும்: மூத்த குடிமக்கள் ஆதரவு மன்ற நூல் வெளியீட்டு விழாவில் அறிவுறுத்தல்

சென்னை: மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம்சார்பில் 'பெர்சனல் ரெக்கார்ட்:வாட் மை ஃபேமிலி ஷுட் நோ'(Personal Record: What my familyshould know) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

பாரத ஸ்டேட் வங்கியின், சென்னை வட்டார தலைமைப்பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா நூலை வெளியிட ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஜெகதீசன், எஸ்.விமலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசிய தமிழ்நாடு அரசுமுன்னாள் தலைமைச் செயலர் கே.எஸ்.பதி, ``வயதில் மூத்தவர்கள் அனுபவம் மிக்கவர்கள். மூத்த குடிமக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்து விவரங்கள் தங்களது பிள்ளைகளுக்கு சரியாகச் சென்று சேர வேண்டுமெனில், அவை குறித்த தகவல்களை முறையாக ஆவணப்படுத்தி பிள்ளைகளுக்குத் தெரிவிக்க வேண்டும். இது ஒவ்வொரு மூத்த குடிமக்களின் கடமையாகும்'' என்றார்.

இந்திய முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ``மூத்த குடிமக்கள் தாங்கள் தயாரிக்கும் தங்களின் சொத்துகள் குறித்த விவரக் குறிப்பில் தங்களது உறவினர்களின் முகவரி, தொலைபேசி எண்களையும் சேர்க்க வேண்டும்'' என்றார்.

பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமைப் பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா தனது உரையில், ``இப்புத்தகத்தைப் பார்த்த உடனேயே எங்கள் வங்கியின் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க ஆர்டர் செய்துவிட்டேன். இப்புத்தகத்தில் நிதி, நிதிசாராத தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இவை மூத்த குடிமக்களின் வாரிசுதாரர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது'' என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.விமலா பேசுகையில், ``நாம் சம்பாதிப்பது சம்பாத்தியம் கிடையாது. சேமிப்புதான் உண்மையான சம்பாத்தியம். நாம் சேமிப்பை எங்கு வைத்திருக்கிறோம். எத்தனை நாள் வைத்திருக்கிறோம் என்ற விவரம் நமக்கும் தெரிவதில்லை, நம் வாரிசுகளுக்கும் தெரிவதில்லை.

இன்றைக்கு இணையம் உலகம் முழுவதையும் இணைத்துள்ளது. ஆனால், நமக்கு அருகில் உள்ளவர்களிடம் இணைப்பு இல்லாத உலகில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, நாம் சேர்த்துவைத்துள்ள விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும்'' என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன் கூறும்போது, ``வயதான காலத்தில் ஞாபகசக்தி குறைகிறது. எனவே, இப்புத்தகத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும், அனைவருக்கும் அவசியமாக உள்ளது'' என்றார்.

மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றத்தின் செயலாளர் ஆர்.சுப்பராஜ், ``நாங்கள் ஒரு பள்ளியையும், ஒரு கிராமத்தையும் தத்தெடுக்க உள்ளோம். அங்கு பள்ளி மாணவர்களுக்கு மூத்த குடிமக்களின் குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து போதிக்க உள்ளோம்'' என்றார். இவ்விழாவில், மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றத்தின் நிர்வாக அதிகாரி பி.ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x