Published : 28 Jan 2023 06:16 AM
Last Updated : 28 Jan 2023 06:16 AM
மதுரை: முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலத் தில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறும் என்று டி.ஆர்.பாலு பேசினார். சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலி யுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், பழங்காநத்தத்தில் திறந்த வெளி மாநாடு நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் முருகானந்தம் வரவேற்றார்.
தென்மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன்ராஜா முன்னிலை வகித்தார். திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்பி, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி உள்ளிட்டோர் பேசினர்.இந்த மாநாட்டில் டி.ஆர்.பாலு பேசியதாவது:
சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஜெயலலிதா போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக அமைதி காத்திருந்தோம். நாங்கள் எடுக்கும் ஒரு முடிவு சில நேரத்தில் தவறாக இருக்கலாம். அது நிரந்தரமில்லை. பனாமா கால்வாய் 10 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. மேலும், அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பனாமா, சூயஸ் கால்வாய்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சேது கால்வாய் திட்டம் நிறைவேறினால் இந்தியாவுக்கு வரும் 70 சதவீத கப்பல்கள் இக்கால்வாய் மூலம் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.700 கோடி வருவாய் கிடைக்கும். இருப்பினும் இத்திட்டத்தை முடக்கிவிட்டனர்.
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். 40-க்கு 40 வெற்றி பெற வீரமணி மற்றும் திருமாவளவன், கேஎஸ்.அழகிரி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உழைத்தால் ஆட்சி அமையும். எதுவானாலும், நம்மை கேட்டு செய்வர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டம் குறித்து ஏற்கெனவே நான் ஆய்வு செய்ய தனுஷ்கோடி சென்றபோது, ராமநாதபுரம் பகுதியில் கரி மூட்டம் போடும் தொழிலாளர்களின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு சொத்துகள் அதிகம் இருந்தும் அப்பகுதியினருக்கு பயனற்று இருப்பது தெரிந்தது.
இதையெல்லாம் மனதில் வைத்தே சேது கால்வாய் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதையொட்டி அப்பகுதிக்கு செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றினோம். இதன் பிறகே அப்பகுதியில் நிலமதிப்பு அதிகரித்தது. தேசிய நெடுஞ்சாலைக்கே நிலமதிப்பு கூடியது என்றால் சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றினால் பொருளாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் பேசினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்து பேசியதாவது: இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் பெரிய மாறுதல் வந்திருக்கும். வளமான தமிழ்நாட்டை பார்த்து இருப்போம். துபாய்க்கு நமது பகுதி இளைஞர்கள் சென்றிருக்க மாட்டார்கள். திட்டமிட்டே தடுத்தனர். இத்திட்டத்துக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளை டிஆர்.பாலு கூறினார். இது உலகம் முழுவதும் போய் சேரும் என நம்புவோம் என்றார்.
மாநாட்டில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர் திமுக மாவட்டச் செயலர் கோ.தளபதி, உயர்மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேல், தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, எம்பிக்கள் சுப்பராயன், நவாஸ் கனி, மதிமுக மாநகர் மாவட்ட செயலர் பூமிநாதன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலர் கதிரவன், வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் பிஎன்.அம்மாசி, இந்திய கம்யூ. மாவட்ட செயலர் கணேசன், இந்திய கம்யூ, மாவட்ட செயலர் முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முகைதீன் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT