Last Updated : 01 Dec, 2016 06:54 PM

 

Published : 01 Dec 2016 06:54 PM
Last Updated : 01 Dec 2016 06:54 PM

ரூ.7 கோடியில் புனரமைப்பு பணிகள்: சின்னமுத்தூர் அணையில் மீண்டும் தண்ணீர் தேக்க திட்டம்?- நொய்யல் விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி நிரந்தரமாக திறந்து விடப்பட்டிருப்பது சின்னமுத்தூர் அணை.

தற்போது இந்த அணை ரூ.7 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அணையில் மீண்டும் நீர் தேக்கப்படுமோ என்று விவசாயிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

அவ்வாறு மீண்டும் நீர் தேக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாழாகும். மீண்டும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலையிலிருந்து உருவாகும் நீரோடைகள், கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே தொம்பிலிபாளையத்தில் ஒன்றிணைந்து, நொய்யல் ஆறாக உருவெடுத்து கரூர் மாவட்டம் நொய்யல் கிராமத்தில் காவிரியில் கலக்கிறது.

இதில், திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட எல்லையில் ஒரத்துப்பாளையம் மற்றும் சின்னமுத்தூர் ஆகிய இடங்களில் 2 அணைகள் 1990-ல் கட்டப்பட்டன.

சின்னமுத்தூரில் கட்டப்பட்டுள்ள அணையிலிருந்து பிரியும் பிரதான வாய்க்கால் அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்வழி, ஆத்துப்பாளையத்தை அடைகிறது. அங்கு கட்டப்பட்டிருக்கும் நொய்யல் அணையின் வாயிலாகப் பிரியும் வாய்க்கால்கள் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் கரூர் வரை செல்கிறது.

24 ஆயிரம் ஏக்கர் பாசனம்

இப்படி அணைகளின் வழியே பிரியும் வாய்க்கால்கள் மூலம் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரத்துப்பாளையம் அணையின் மூலம் 5 ஆயிரம் ஏக்கர், சின்னமுத்தூர் அணை மற்றும் கார்வழி அணைகளின் மூலம் 19 ஆயிரம் ஏக்கரில் பாசனம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

அணைகள் கட்டப்பட்ட சில ஆண்டுகளிலேயே நொய்யலில் வந்த சாய, சலவைப் பட்டறை நீர் இங்குள்ள பாசன நிலங்களைப் பாதித்தது. குடிநீரில் கரையக்கூடிய உப்பின் மொத்த அளவு 500 முதல் 1,500 டி.டி.எஸ். (Total dissolved solids) வரை இருக்கலாம். பாசனத்துக்கு உகந்த நீரில் சுமார் 2,100 டி.டி.எஸ். இருக்கும்.

ஆனால், இந்த அணையின் நீரில் 6 ஆயிரம் முதல் 17 ஆயிரம் டி.டி.எஸ். இருந்ததால், விவசாய நிலங்கள் பாழ்பட்டு, மரங்கள், பயிர்கள் கருகின. இந்த அணை திறந்துவிடப்பட்டால், அதிலிருந்து வரும் நீரால் விவசாயம் பாதிக்கப்படும். இதனால், அணையைத் திறக்கக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினர். அதேசமயம், நீர் தேங்கியிருப்பதால், தங்கள் நிலங்கள் நஞ்சாகிவிட்டன. அதை திறக்க வேண்டும் என்று அணைப்பகுதி விவசாயிகளும் போராடினர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவும், திருப்பூர் சாய ஆலைகளை மூடவும், அணையைத் திறக்காமல் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அணை நீரை நிரந்தரமாகத் திறந்துவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஒரத்துப்பாளையம், சின்னமுத்தூர் அணைகள் நிரந்தரமாக திறந்தே வைக்கப்பட்டுள்ளன.

6 ஆயிரம் டி.டி.எஸ்.

இதனால் இங்கு நிலத்தடி நீரில் இருந்த கரையக்கூடிய உப்பின் அளவு 2 ஆயிரம் டி.டி.எஸ். வரை குறைந்துள்ளதாகவும், அணையில் நீர் தேங்கினால் அது 4 ஆயிரம், 6 ஆயிரம் டி.டி.எஸ்.-ஆக அதிகரித்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

திருப்பூரில் சாய ஆலைகள் பெயரளவில் மூடப்பட்டாலும், முறைகேடான முறையில் இயங்கி, கழிவுநீரை வெளியேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன என்று இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஓராண்டாக ரூ.7 கோடி செலவில் சின்னமுத்தூர் அணையை புனரமைத்துள்ளனர் பொதுப்பணித் துறையினர். தற்போது அணையின் ஷட்டர்களின் பழுது நீக்கப்பட்டு, அணையைச் சுற்றிலும் புதிதாக தளம்போடப்பட்டு, மின் மோட்டார்கள், அணை மின் விளக்குகள் சரிசெய்யப்பட்டு பளிச்சென்று காட்சியளிக்கிறது. இது இப்பகுதி மக்களிடம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

“நிரந்தரமாக திறந்தே வைக்கப்பட்டிருக்கும் அணையை இப்போது எதற்கு புதுப்பிக்க வேண்டும்? திரும்பவும் நீர்தேக்கும் திட்டமா?” என்று விவசாயிகளும், “இந்த அணையைப் புதுப்பிக்க ரூ.7 கோடி செலவு என்பதெல்லாம் பெயருக்குத்தான். வெறுமனே அணைக் கதவுகளுக்கு எண்ணெய் விட்டு பாலீஷ் செய்து, இடிபாடுகளை மட்டும் சரி செய்திருக்கிறார்கள். இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது” என்று பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளப் பாதிப்பை தடுக்கவே புனரமைப்பு

இதுகுறித்து ஈரோடு பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் கூறும்போது, “சின்னமுத்தூர் அணை 1999-ம் ஆண்டு முதலே பராமரிப்பின்றிக் கிடக்கிறது. நொய்யலில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் இதன் கதவுகளை (ஷட்டர்) மேலே கொண்டு வரவோ, கீழே இறக்கவோ முடிவதில்லை.

இந்த அணையின் வழியே வெள்ளக்காலங்களில் விநாடிக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கனஅடி நீர் பாய்கிறது. ஆனால், திறக்கப்பட்ட கதவுகள் மூலம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கனஅடியே செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படியே இருந்தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த அணையை பராமரித்து, கதவுகளை திறந்து, மூடச்செய்வதன் மூலம் வெள்ளக்காலங்களில் அணையின் நீரை முழுமையாகத் திறந்துவிட்டு ஊருக்குள் வெள்ளம் புகுவதைத் தடுக்கலாம்.

இது தவிர, பக்கத்தில் உள்ள வாய்க்கால் மதகை திறந்துவிட்டு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆத்துப்பாளையம் அணையில் 235 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கலாம். அதை அடுத்துள்ள 40 கிலோமீட்டர் வாய்க்காலில் நீரைக் கொண்டுசென்று, 19,500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கலாம்.

அதற்காகவே இந்த புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அணையில் நீரைத் தேக்குவதா, வேண்டாமா என்பது தொடர்பாக, இங்குள்ள விவசாய சங்கங்களிடமே மாறுபட் கருத்துகள் உள்ளன. அதனால், இது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி, விவசாயிகளின் கருத்தை அறிந்து, அனைவரும் ஏற்றுக் கொண்ட பின்னரே அணையில் தண்ணீர் தேக்குவதா, வெளியேற்றுவதா என்று முடிவு செய்கிறோம். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுப்பதில்லை. இதேபோல, வரும் காலங்களிலும் முடிவெடுப்போம். புனரமைப்புப் பணிகளில் முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை. பழுதாகியிருந்த ஜெனரேட்டர், எரியாமலே இருந்த மின் விளக்குகள், மோட்டார்களைப் புதுப்பித்துள்ளோம். அதுமட்டுமின்றி, 9 ஷட்டர்களைப் புதுப்பித்து, அவை தற்போது முழுமையாக இயங்கும் நிலையில் உள்ளன” என்றார்.

“நிரந்தரமாக திறந்தே வைக்கப்பட்டிருக்கும் அணையை இப்போது எதற்கு புதுப்பிக்க வேண்டும்? திரும்பவும் நீர்தேக்கும் திட்டமா?” என்று விவசாயிகளும், “இந்த அணையைப் புதுப்பிக்க ரூ.7 கோடி செலவு என்பதெல்லாம் பெயருக்குத்தான். வெறுமனே அணைக் கதவுகளுக்கு எண்ணெய் விட்டு பாலீஷ் செய்து, இடிபாடுகளை மட்டும் சரி செய்திருக்கிறார்கள். இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது” என்று பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, “இந்த அணை புனரமைப்பு என்பதே தேவையற்றது. அணையில் மீண்டும் தண்ணீரைத் தேக்க முயற்சித்தால், அது சட்டப்படி தவறு. அதை எதிர்த்து விவசாயிகள் போராடுவோம்” என்று அறிவித்துள்ளார் கரூர் நொய்யல் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ராமசாமி. அவர் ‘தி இந்து’விடம் கூறியது:

சின்னமுத்தூர் பிரதான அணையில் ஷட்டர்களை பழுது நீக்கி, ஏற்றி இறக்குமாறு செய்திருக்கிறார்கள். மற்றபடி இங்கிருந்து பிரியும் வாய்க்கால்களில் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மதகுகள், ஷட்டர்கள் சரி செய்யப்படவில்லை. அப்படி செய்திருந்தால்கூட, பெரு வெள்ளக்காலங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் வராத சமயத்தில் அந்த நீரை வாய்க்காலில் விட்டு பாசனத்துக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

அதன் மூலம் அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, தென்னிலை கீழ், தென்னிலை மேல், முன்னூர், குப்பம், அத்திபாளையம், புன்னம், வேட்டை மங்கலம், புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, கடமங்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், காதப்பாறை, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி என கரூர் வரை 18 கிராம ஊராட்சிகளில் உள்ள 19 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

போராட்டம் நடத்துவோம்

ஆனால், இப்போது இந்த அணை பழுதுநீக்கியிருப்பதைப் பார்த்தால், மீண்டும் சாயக் கழிவுநீரைத் தேக்கவே முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. அப்படி செய்வது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். அப்படி செய்தால் இந்தப் பகுதியில் உள்ள நிலங்கள் மீண்டும் பாழாகும். நிலத்தடி நீரில் உப்பின் அளவு 10 ஆயிரம் டி.டி.எஸ். தாண்ட வாய்ப்பு ஏற்படும். அதிகாரிகள் இதற்கான ஏற்பாட்டில் இறங்கினால், கரூர் மாவட்ட நொய்யல் பாசன விவசாயிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x