

மதுரை: திராவிடர் கழகம் சார்பில், நடந்த சேது சமுத்திர திட்டம் குறித்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேதுசமுத்திரத் திட்டம் என்பது தமிழக வளர்ச்சிக்கான ஒரு திட்டம். சோனியா காந்தி பொறுப்பேற்றபோது, கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது, இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள், இத்திட்டம் அவசியம் தேவை என, கருத்து கூறுகின்றனர். ரூ.2,500 கோடியிலான திட்டத்தில் 600 கோடி வரை செலவானது. பிறகு, திட்டம் நிறுத்தப்பட்டது. இதற்காக சொல்லப்பட்ட காரணம் சரியானது அல்ல. உலகிலுள்ள நீர் வழிப்பாதைகள் அப்பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றனர். இதன்படி, சூயஸ், பனாமா கால்வால்கள் அப்பகுதியை வளர்ச்சி அடைய செய்துள்ளன.
சேது சமுத்திரத் திட்டத்தால் தென் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். தமிழக மக்கள் சார்பில், மீண்டும் குரல் கொடுக்க வந்துள்ளோம். கமல் உடம்பில் ரத்த அணுக்கள் தான் ஓடவேண்டும். காங்கிரஸ் ரத்தம் கூடாது என சீமான் கூறியுள்ளார். அப்படி எதுவுமில்லை. ஒவ்வொருவரின் உடலிலும் ரத்த அணுக்கள் மட்டுமே ஓடும். அது அவருக்கு புரியவேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். முதல்வர், ராகுல் காந்தி ஆகியோர் நல்ல திட்டங்களை சொல்லி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இதன் எடுத்துக்காட்டாகவே கமலஹாசன் எங்களுக்கு ஆதரவளித்துள்ளார். ஆளுநர் தேநீர் விருந்தில் அரசியலமைப்பு சட்டத்தின்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவரது செயலை பாராட்டுகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.