தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: வாசன்

தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: வாசன்
Updated on
1 min read

தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேரும், அடித்தளமும் பொதுத் தேர்தல்தான். அத்தேர்தல் முறையாகவும், சரியாகவும் நடைபெற வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் தேர்தலில் நெறிமுறைகள் மீறப்படுகின்றன, விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன, வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் சந்தைப் பொருளாகிவிட்டன என்ற குற்றச்சாட்டுகள் வலுப்பெற்று வருகின்றன.

இச்சூழலில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் டெல்லியில் சட்டதிட்டங்கள் குறித்த தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்பு 47 தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அவை சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் குறிப்பாக குற்றவாளிகள் தேர்தல்களில் நிறுத்தப்படுவதைத் தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வழங்குவதை கிரிமினல் குற்றங்களாகக் கருதி நடவடிக்கை எடுப்பது, பணம் கொடுப்பவர்களுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் செயல்பாட்டை தடுப்பது, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் தேர்தலை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவது போன்ற பரிந்துரைகள் அடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான ஆணையத்தின் இந்த நல்ல முயற்சியை வரவேற்க வேண்டும். அதே சமயம் இப்பரிந்துரைகளை மத்திய அரசு அனைத்து அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள், சமுதாயச் சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.

அவசியமாயின் அக்கருத்துக்களை ஓர் நிபுணர் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தலாம். அதன் அடிப்படையில் உருவாகும் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளாக நாடாளுமன்ற விவாதத்திற்கு பின்பு நிறைவேற்ற வேண்டும்.

மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் இந்த நடவடிக்கையை எடுத்து, தேர்தல் சீர்திருத்த நெறிமுறைகளை செயல்பாட்டுக்கு அடுத்து வர இருக்கின்ற தேர்தல் முதல் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in