Published : 27 Jan 2023 03:24 PM
Last Updated : 27 Jan 2023 03:24 PM

திருப்பூர் சம்பவம் | “இது தமிழ்நாடா அல்லது வடமாநிலமா?” - வேல்முருகன் காட்டம்

தி.வேல்முருகன் | கோப்புப்படம்.

சென்னை: “வடமாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள். அன்றாடம் ஆயிரம் பல்லாயிரம் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குவிகின்றனர். கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அமைப்புச்சாரப் பணிகளிலும், பெருமளவு வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள்.

வெளியார் வெள்ளம் இதே அளவுக்குத் தமிழ்நாட்டில் அன்றாடம் புகுந்தால், பின்னர் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இருக்காது. இந்திக்காரர்களின் மாநிலமாகவோ, கலப்பின மண்டலமாகவோ மாறிவிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், வெளிமாநிலத்தவர்கள் சென்று தங்க, அம்மாநிலங்களின் உள் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இந்தs சட்டம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும் என்கிறோம்.

இது ஒரு புறமிருக்க, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை, வடமாநில தொழிலாளர்கள் ஓடஓட விரட்டியதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்துகிறது. இது தமிழ்நாடா அல்லது வடமாநிலமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது, அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, வடமாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்கள் ஒன்று சேர்ந்து, எதிர் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் என்பதை கவனத்தில் கொண்டு, குற்றச்செயலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற கடந்த 9 ஆண்டுகளில் இத்தகைய வடவர் திணிப்பு லட்சக்கணக்கில் பல மடங்கு வீரியமாக அதிகரித்துள்ளது.

இது, எதிர்காலத்தில், தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் முயற்சி என்பதோடு, இந்துத்துவத்தைத் தமிழ் மண்ணில் விதைத்து, தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறும். இந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற மனிதகுல விரோத கும்பலின் சதித்திட்டங்களை புரிந்துகொண்டு, வடமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டை முதல் வாக்காளர் அட்டைகளை திரும்ப பெற வேண்டும். எதிர் வரும் காலத்தில், அவ்வாறு தரக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x