

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றும், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு சாதாரண உடல்நலக் குறைவால் 24.01.2023 செவ்வாய்க்கிழமை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றார்கள். மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவர் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார் என தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நல்லக்கண்ணுவிற்கு கடந்த 24-ம் தேதி மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்த நல்லகண்ணுவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறும்போது, “நல்லகண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது. பொதுப்பிரிவு மருத்துவர்கள், நுரையீரல் துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.