Published : 27 Jan 2023 04:21 AM
Last Updated : 27 Jan 2023 04:21 AM

தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் - முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

வாணி ஜெயராம், கே. கல்யாணசுந்தரம் பிள்ளை, வடிவேல் கோபால், மாசி சடையன், பாலம் கல்யாணசுந்தரம், கோபால்சாமி வேலுச்சாமி

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 106 பேர் அடங்கிய பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாணி ஜெயராம்: அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இசைக்குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர். பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ள இவர், பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

கல்யாணசுந்தரம் பிள்ளை: அதேபோல் தஞ்சாவூரைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் திருவிடைமருதூர் குப்பையா கல்யாணசுந்தரம். இவர் தனது தந்தை குப்பையா பிள்ளை மற்றும் தனது சகோதரர் டி.கே.மகாலிங்கம் பிள்ளை ஆகியோரிடம் பரத நாட்டியத்தை கற்றுத் தேர்ந்தார்.

இவரது குடும்பம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சாவூர் பாணியிலான பரத நாட்டியத்தை பரப்பி வருகிறது. தனது 6-வது வயதில் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகும்பேஸ்வரர் கோயிலில் தனது முதல் அரங்கேற்றத்தை நடத்தினார். கலைமாமணி, நாட்டிய செல்வம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வடிவேல் கோபால், மாசி சடையன்: தமிழகத்தை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகளை பிடித்து வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து பாம்புகளை பிடித்துள்ளனர்.

பாலம் கல்யாணசுந்தரம்: நூலகர் மற்றும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பிறந்த இவர், 30 ஆண்டுகள் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றியுள்ளார். அதில் கிடைத்த வருமானம், ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே ஏழைகளுக்கான தொண்டு பணிக்கு வழங்கினார். ‘பாலம்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சமூக சேவை ஆற்றி வருகிறார்.

கோபால்சாமி வேலுச்சாமி: மருத்துவப் பிரிவில் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் பனையேறிப்பட்டியில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பாளையங்கோட்டையில் சித்த மருத்துவம் படித்தார். பின்னர் உதவி பேராசிரியர், பேராசிரியர், துறை தலைவர், ஆயுர்வேதம் மற்றும் சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள பாடகி வாணிஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள கல்யாணசுந்தரம் பிள்ளை, பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், ‘பாலம்’ கல்யாணசுந்தரம், கோபால்சாமி வேலுச்சாமி ஆகிய 6 பேருக்கும் எனது மனமகிழ் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தை பெருமையடையச் செய்துள்ளீர்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: 2023-ம் ஆண்டு பத்ம விருதுகளை பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பத்மபூஷண் விருது பெற்ற பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், பாம்புபிடி கலைஞர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, நடனக்கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோர் மேலும் பல விருதுகளை வெல்ல வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களை தமாகா சார்பில் வாழ்த்துகிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நாட்டின் உயரிய பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகள். அவரவர் துறைகளில் இன்னும் பல சாதனைகளைப் பெற வாழ்த்துகிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: பத்ம விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x