Published : 27 Jan 2023 03:52 AM
Last Updated : 27 Jan 2023 03:52 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

சென்னை/ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலையொட்டி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப். 27-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார் சி.வி.சண்முகம், செம்மலை, கே.வி.ராமலிங்கம் மற்றும் மு.தம்பிதுரை எம்.பி., தற்போதைய எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இரட்டை இலை இல்லாவிட்டால்...: இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் காலை 10 மணிக்குத் தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், விஜயபாஸ்கர், செம்மலை, எம்எல்ஏ-க்கள் ஜெயக்குமார், பண்ணாரி மற்றும் நிர்வாகிகள், தமாகா மாநிலப் பொதுச் செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏறத்தாழ 7 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம், மாலை 6.15 மணியளவில் நிறைவடைந்தது. இன்றும் (ஜன. 27) ஈரோட்டில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னதாக, நசியனூரில் உள்ள தனது குல தெய்வம் அப்பாத்தாள் கோயிலில் பழனிசாமி வழிபாடு செய்தார்.

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்கு சாதகமாக அமைந்து, இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைக்கும். ஒருவேளை கிடைக்காவிட்டாலும், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி என்று பழனிசாமி கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னணி நிர்வாகிகளுடன் கலந்துபேசி, யார் வேட்பாளர் என்பதை அறிவிப்பதாகவும் பழனிசாமி தெரிவித்தார். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

வேட்பாளர் யார்?: ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிக்குழுவில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால், வேட்பாளர் பட்டியலில் ராமலிங்கம் இடம் பெற மாட்டார் என்று தெரிவித்த கட்சி நிர்வாகிகள், இந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, பகுதி செயலாளர் மனோகரன், மாணவரணி இணைச் செயலாளர் நந்தகோபால் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x