

சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக ‘அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் - கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்கத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்து வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
74-வது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் இந்தியஒற்றுமைப் பயணத்தின் தொடர்ச்சியாக, ‘அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்கத்தை திருவிக சாலையில் தொடங்கி வைத்தார்.
அதில் இந்திய காங்கிரஸ் தயாரித்த ராகுல்காந்தியின் கடிதம் மற்றும் பாஜகவுக்கு எதிரான குற்றச்சாட்டு பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தார்.
நிகழ்ச்சி குறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
ராகுல்காந்தியின் எழுச்சி பயணம்
இந்தியாவின் 74-வது குடியரசுதினத்தை விமரிசையாக கொண்டாடி இருக்கிறோம். இதுவரைஇல்லாத அளவு ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்தியின் நடைபயணம்மற்றும் அதன் எழுச்சி தான்இதற்கு அடிப்படையான காரணம்.இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக ராகுல் காந்தியின் கடிதத்தை ஒவ்வொரு வீடாக சென்று வழங்கியிருக்கிறோம்.
எதிர்த் தரப்பை காணவில்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மநீம எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறது. கமல்ஹாசனின் ஆதரவு மகத்தான வெற்றியை தரும். ஈரோடு தொகுதியின் களத்தில் நாங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். ஆனால்எதிர்தரப்பினரை தான் கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவில்லை. இது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், கட்சியின் மாநில செயல் தலைவர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மவுலானா, கட்சியின் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜ சேகரன், ஜெ.டில்லிபாபு, எம்.பி. ரஞ்சன்குமார், எம்.ஏ.முத்தழகன், அடையாறு த.துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.