Last Updated : 21 Dec, 2016 03:54 PM

 

Published : 21 Dec 2016 03:54 PM
Last Updated : 21 Dec 2016 03:54 PM

ஜெயலலிதா பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் அல்ல: அன்புமணி சிறப்பு பேட்டி

பாமகவின் இளைஞர் அணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரியுள்ள தமிழக அரசின் வேண்டுகோளைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அன்புமணி அளித்த சிறப்புப் பேட்டியில், தேசத்தின் உயரிய விருதான பாரத ரத்னா அப்பழுக்கில்லாத, நேர்மையான தலைவர்களுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்காக தன்னிகரற்ற பங்களிப்பை அளித்தவர்களுக்குமே வழங்கப்பட வேண்டும். இந்த வகைமைகளில் ஜெயலலிதா பொருந்தமாட்டார் என்று கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக எண்ணுகிறீர்களா?

ஆம், நிச்சயமாக தமிழ்நாட்டில் ஓர் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதிமுக 'தனி மனித' கட்சியாக இருந்தது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கட்சித் தலைவர்கள் அவரின் தோழியான சசிகலாவின் பின்னால் அணி திரண்டுள்ளனர். அவர்களின் எண்ணம் மீதமிருக்கும் நான்கரை ஆண்டு காலத்துக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.

ஆனால் சசிகலாவால் மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெறமுடியாது என்பது என்னுடைய கருத்து. இத்தனை வருடங்களாக, சசிகலா திரைமறைவு அரசியலில் மட்டுமே ஈடுபட்டிருந்தார். மக்கள் அவரின் குரலைக்கூட இதுவரை கேட்டிருக்க மாட்டார்கள்.

ஜெயலலிதா, உண்மையிலேயே சசிகலாவை ஒரு வெற்றியாளராக வளர்த்தெடுக்க ஆசைப்பட்டிருந்தால், அவர் நிச்சயம் சசிகலாவுக்கு கட்சியில் ஒரு இடத்தை அளித்திருப்பார். என்ன செய்ய, ஜெயலலிதாவுக்கே அதிமுகவின் வருங்காலம் குறித்த உறுதியான நிலைப்பாடு இல்லை.

இப்போது தமிழக அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால் விருதைப் பெற அவர் தகுதியானவர் இல்லை. ஜெயலலிதா 15 ஊழல் வழக்குகளைச் சந்தித்தவர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

சிறையில் தன்னுடைய நாட்களைக் கழித்த ஒரே முதலமைச்சர் அவர்தான். ஜெயலலிதா தமிழ்நாட்டை சீர்குலைந்த நிலையில் விட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாட்டின் கடன் ரூ. 5.10 லட்சம் கோடிகளைத் தாண்டிச் சென்றுள்ளது. தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது. அவரின் ஆட்சிக்காலத்தில் விவசாயம் எதிர்மறையான வளர்ச்சியைப் பெற்றது.

இரு பெரும் திராவிடக் கழகங்களான திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்று நாங்கள் என்று பாமக தொடர்ந்து கூறிவருகிறது. நீங்கள் முன்பு கூறிய அரசியல் வெற்றிடத்தை உங்கள் கட்சி நிரப்பும் என்று நினைக்கிறீர்களா?

திராவிடக் கட்சிகளால் தமிழக மக்கள் வெறுப்புற்றுள்ளனர். அரசியல் கலாச்சாரமே அக்கட்சிகளால்தான் தீர்மானிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதாவுக்குப் பிறகு, தமிழகத்துக்கு மாற்றம் மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. இது எங்களுக்கு நிச்சயம் சாதகமாக அமையும்.

ஆளுமை சார்ந்த, வெற்றுக்கூச்சல்கள் நிறைந்த, பகைமையை அடிப்படையாகக் கொண்ட திராவிட அரசியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இரண்டு கட்சிகளும் மூன்றாவதாக ஒரு மாற்றுக்கட்சி வருவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து ஓர் அரசியல் விளையாட்டை ஆடி வருகின்றன.

முன்பு கருணாநிதியா எம்.ஜி.ஆரா, அடுத்ததாக கருணாநிதியா ஜெயலலிதாவா என்ற நிலை இருந்தது. இந்த அரசியலில் சசிகலாவால் நிற்க முடியாது. பன்னீர்செல்வம் ஒரு பணிவான, சாந்தமான தலைவர்.

மக்கள் இலவசங்கள் வழங்கும் கலாச்சாரம் இல்லாத, மது விற்பனை அற்ற, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்கிற அரசியல் கட்சியை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கடந்த தேர்தலில் ஏராளமான தொகுதிகளில் 40,000 வாக்குகளைப் பெற்றுள்ளோம். மக்கள், தமிழக அரசியலில் இனி மு.க.ஸ்டாலினா அன்புமணியா என்று பேசுகின்றனர். ஆனால் நான் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

பாமக தமிழ் மக்களுக்கு ஆதரவான, வளர்ச்சியை முதன்மையாகக் கொண்ட கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், சாதி சார்ந்த பிரச்சனைகள் எழும்போதெல்லாம் பாமக மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றனவே...

பாமகவுக்கு எதிராக தொடர்ச்சியாக, முறையற்ற பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. பல காலத்துக்கு முன்னால் மதுவுக்கு எதிராக மற்றவர்கள் யோசித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால் நாங்கள் முழு மது விலக்குக் கோரி ஏராளமான போராட்டங்களை நடத்தினோம். மதுவுக்கு எதிரான எங்கள் வழக்கில்தான் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

எங்களின் இந்த முயற்சிகளை குறிப்பிட்ட சமூகத்தினருக்கானதாக மட்டும் பார்க்கிறீர்களா? நாங்கள் 'அடையாளம் சார்ந்த அரசியலை', 'வளர்ச்சியை முன்னிறுத்திய அரசியலாக' மாற்ற ஆசைப்படுகிறோம்.

சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்று அதிமுகவில் ஒலிக்கும் குரல்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறதே.. இதில் உங்களின் பார்வை என்ன?

முதலைமைச்சர் பன்னீர்செல்வம் அரசியலமைப்புக்குட்பட்ட அதிகாரிகள் தவிர்த்து, மற்றவர்களின் தலையீடுகள் எதுவும் இல்லாமல் இயங்கவேண்டும். அவர் ஆளும் அதிமுகவின் எம்.எல்.ஏ.க்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான் ஏற்கனவே சொன்னதுபோல, சசிகலாவை அரசியலில் முன்னிறுத்த வேண்டும் என்று ஜெயலலிதா ஆசைப்பட்டிருந்தால், நிச்சயம் சசிகலாவுக்கு ஒரு பதவியை அளித்திருப்பார். அளிக்கவில்லை. அவ்வளவுதான்.

தமிழில்:க.சே. ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x