

கோவை: தைப்பூசம், பழநி கோயில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு கோவை-திண்டுக்கல் இடையே 6 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை கடந்த 13-ம் தேதி தொடங்கி 18-ம் தேதியுடன் நிறைவடைந்தது. பொள்ளாச்சி, உடுமலை, பழநி வழியாக இயக்கப்பட்ட இந்த ரயில் சேவையை, பழநி கோயில் கும்பாபிஷேகம், தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தைப்பூசம், பழநி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இயக்கப்படும் கோவை-திண்டுக்கல் இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06077) ஜனவரி 27 (இன்று), 28, 29, பிப்ரவரி 4, 5, 6 ஆகிய நாட்களில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.
இதேபோல, திண்டுக்கல் - கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06078) 27, 28, 29, பிப்ரவரி 4, 5, 6 ஆகிய நாட்களில் மதியம் 2 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடையும். வழியில் இந்த ரயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பேட்டை ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கூறும்போது, “இந்த ரயில் மூலம் மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் செல்வதால், திருச்சி, விருத்தாசலம் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை (எழும்பூர்) போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் மதியம் 1.35 மணிக்கு திண்டுக்கல் வரும் குருவாயூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்தி பயணிக்கலாம். விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு செல்பவர்கள் மதியம் 1.25 மணிக்கு கோவை - நாகர்கோவில் ரயிலை திண்டுக்கல்லில் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.
அதேபோல, குருவாயூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கோவை ரயிலில் தென் மாவட்டங் களில் இருந்து திண்டுக்கல் வரும் பயணிகள், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மதியம் இரண்டு மணிக்கு புறப்படும் திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லா சிறப்பு ரயிலை பயன்படுத்தி மடத்துக்குளம், உடுமலை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை பகுதிகளுக்கு வரலாம்” என்றனர்.