பதிவு எண் சரியாக எழுதப்படாத 16,107 வாகனங்கள் மீது நடவடிக்கை

பதிவு எண் சரியாக எழுதப்படாத 16,107 வாகனங்கள் மீது நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: பதிவு எண் சரியாக எழுதப்படாத 16,107 வாகனங்கள் மீது சென்னை போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னையில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் உயர்த்தப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைத்து,கட்டுப்பாட்டு அறையில்இருந்த வாறும்கூட அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த 24, 25 ஆகிய இரு தினங்கள் போக்குவரத்து போலீஸார் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, வாகனங்களில் பதிவு எண் சரியாக உள்ளதா, பதிவு எண்எழுதப்பட்ட பிளேட் சரியான அளவில் உள்ளதா என ஆய்வு செய்தனர். ஒவ்வொரு போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 3 இடங்களை தேர்வு செய்து முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களை கண்டறிய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு வாகனத் தணிக்கையில் 16,107 வாகனங்களில் சரியான பதிவு எண்கள் இல்லாதது கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 145 வாகனங்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த வாகனங்கள் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு இடத்தில் திருடப்பட்டதா என குற்றப்பிரிவு மூலம் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து வாகன தணிக்கை மேற்கொள்ள உள்ளனர். எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in