Published : 04 Dec 2016 05:52 PM
Last Updated : 04 Dec 2016 05:52 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் மழை வாய்ப்பு

அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம், புதுச் சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று நேற்று உருவாகியுள்ளது. அதை சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தற்போது அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்டவற்றுக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதுடன், நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு சுமத்ரா தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுநிலையின் வலு மற்றும் போக்கு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

அரபிக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால், ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று அரபிக் கடல் நோக்கி வீசுவதால், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் சில பகுதியில் இடைவெளிவிட்டு லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் அதிகபட்சமாக 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூரில் 5 செ.மீ., சிவகங்கை, நாங்குநேரி, பரமகுடி ஆகிய பகுதிகளில் 4 செ.மீ., சென்னை, தாமரைப்பாக்கம், கோத்தகிரி, குமாரபாளையம், பெரும்புதூர் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை இயல்பாக 370 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 129.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 65 சதவீதம் குறைவு.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x