Published : 27 Jan 2023 06:04 AM
Last Updated : 27 Jan 2023 06:04 AM
கடலூர்: சிதம்பரம் நகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் ஏற்படுவதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
சிதம்பரத்தில் நடராஜர் கோயில்மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை பிரசித்தி பெற்று விளங்குகிறது. நாள் ஒன்றுக்கு வெளிநாடு, வெளிமாநில, வெளி மாவட்ட மற்றும் உள்ளூர் மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நடராஜர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் நகரின் முக்கிய நான்கு வீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி மற்றும் வேணுகோபால் பிள்ளை தெரு, எஸ்.பி.கோயில் தெரு, சபாநாயகர் தெரு, ரயில் நிலையம் செல்லும் சாலை, உழவர் சந்தை பகுதி, ஓமக்குளம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் கால் நடைகள் தாறுமாறாக சுற்றித் திரிகின்றன. பட்ட பகலில் சாலை யின் நடுவே மாடுகள் படுத்துக் கொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது. இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.
சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த காசிநாதன் (60) என்பவர் எஸ்.பி.கோயில் தெருவில் சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரில் நடந்து சென்றபோது மாடு ஒன்று விரட்டி முட்ட வந்துள்ளது. மாட்டுக்கு பயந்து காசிநாதன் சாலையில் சென்றபோது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது மாடுகள் திடீரென சாலைக்கு வந்து விடுவதால் ஓட்டுநர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து சாலைகளில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிதம்பரம் நகர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT