

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அதிரடியாக நீக்கப்பட்டது குறித்து பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் வீரேந்திர கட்டாரியா கடந்த 2013 ஜூலை மாதம் பொறுப்பேற்றார். பதவி ஏற்ற உடனேயே ஆளுநர் கட்டாரியா நேரடியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தலையிட்டார். இதனால் முதல்வர் ரங்கசாமிக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடு எழுந்தது. மேலும் அதிகாரிகள் மாற்றம் குறித்த கோப்புகளிலும் கையெழுத்திடாமல் தட்டிக் கழித்தார்.
இதை முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக மேடையில் தெரிவித்தார். மேலும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்துதான் இப்பிரச்சினைக்குத் தீர்வு தரும் எனவும் முதல்வர் ரங்கசாமி குரல் எழுப்பினார். இதற்கிடையே, ரங்கசாமிக்கு நெருக்கடி அளிப்பதற்காகவே அப்போதைய மத்திய அமைச்சர் நாராயணசாமி சிபாரிசில் கட்டாரியா நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணியில் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டது. அந்த கட்சியின் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். மத்தியிலும் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பதவியேற்றது. அதன்பிறகு, கட்டாரியாவை மாற்றக்கோரி முதல்வர் ரங்கசாமி புதுவை மாநில பாஜகவினர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினர்.
அதே நேரத்தில், பதவியைக் காப்பாற்றிக் கொள்ள கட்டாரி யாவும் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். எனினும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆளுநர்களை பதவியில் இருந்து நீக்கும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு முதல் ஆளாக கட்டாரியா இலக்காகி உள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கட்டாரியாவை விடுவித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அந்தமான்-நிகோபார் தீவுகள் துணைநிலை ஆளுநர் அஜய்குமார் சிங் கூடுதலாக புதுவை ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கட்டாரியா நீக்கத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. லலித்கலா அகாடமியில் தனது உறவினருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியை சில மாதங்களுக்கு முன் பெற்றுத் தந்தார். அது சர்ச்சையை கிளப்பியது. மேலும், சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு வந்து பல மாதங்கள் கடந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மேல் முறையீடு செய்ய கட்டாரியா அனுமதி அளித்தார்.
இது போன்ற காரணங்களால் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும். கடந்த சில மாதங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. சென்னை மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தார். எனவே, உடல் நிலை காரணமாகவும் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கட்டாரியா நீக்கப்பட்டதை ரங்கசாமி தலைமையிலான ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். புதுச்சேரி நகரின் பிரதான சாலையான காமராஜர் சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.