Published : 27 Jan 2023 06:35 AM
Last Updated : 27 Jan 2023 06:35 AM
வேலூர்/திருப்பத்தூர்: நகரத்தை விட கிராமத்தில் தான் சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வாழ முடியும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் அகரம்சேரி ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் வச்சலா ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசும்போது, ‘‘நகரத்தை விட கிராமத்தில் தான் சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வாழ முடியும். கிராம ஊராட்சியின் பொருளாதாரம் தான் நாட்டின் பொருளாதாரம் ஆகும். பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய மகளிர் குழுக்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் சுழல் நிதி மற்றும் வங்கி கடனுதவிகளை வழங்கி சுய தொழில் செய்ய வழிவகை செய்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்தி சிறு தொழில் செய்து தங்கள் வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும்.
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். நமது ஊராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அது நம்முடைய தலையாய கடமையாகும்.
திறந்தவெளியில் மலம் கழித்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். கொசுக்கள் உருவாகும் காரணிகளை அழித்து சுகாதாரமான முறையில் வாழ வழிவகை செய்வோம்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தி முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி நித்யானந்தம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்
குடியரசு தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நத்தம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு 350 பேருக்கு தென்னங்கன்றுகளை வழங்கி பேசும்போது, ‘‘திருப்பத் தூர் மாவட்டத்தில் நில அளவையாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (இன்று) அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்கள் தேவைகளையும், குறைகளையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்து தீர்வு காணலாம். ஆண்டு தோறும் 6 முறை கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களது கிராமங்களில் உள்ள திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். மேலும், முக்கிய பிரச்சினைகள் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தி ஊராட்சி சட்டத்தின் மூலம் அறிவிப்பு செய்யலாம்.
பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்த மனுக்களை எங்கு கொடுக்க வேண்டும் என்ற தகவல் தெரியவில்லை என்றால் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்து தீர்வு காணலாம்’’ என்றார்.
இதில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்ககள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற் றம். நமது ஊராட்சியை சுத்தமாகவும், சுகாதார மாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT