Published : 26 Jan 2023 04:07 AM
Last Updated : 26 Jan 2023 04:07 AM

நாட்டின் 74-வது குடியரசு தினம் - ஆளுநர் ரவி தேசிய கொடியேற்றுகிறார்

சென்னை: இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றிவைத்து முப்படை மற்றும் தமிழக காவல் உள்ளிட்ட சீருடை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். அண்ணா பதக்கம், கோட்டை அமீர் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில், மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு வரை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பகுதியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தற்போது அங்கு மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் நடைபெறுவதால் இடம் மாற்றப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு உழைப்பாளர் சிலை பகுதியில் ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றுகிறார். முன்னதாக, காலை 7.50 மணிக்கு முதலில் காவல்துறை வாகன அணிவகுப்புடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரைத் தொடர்ந்து ராணுவத்தினரின் வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவியும் நிகழ்விடத்துக்கு வருவார்கள். அதைத்தொடர்ந்து, ஆளுநர் மற்றும் முதல்வருக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிமுகம் செய்து வைப்பார்.

அதன்பின், சரியாக 8 மணிக்கு ஆளுநர் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றியதும், ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்படும். இதையடுத்து, முப்படையினர், கடலோர காவல்படையினர், பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியக்குழு உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெறும். அதேபோல், கடலோர காவல்படை, கடற்படை, விமானப் படையின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்.

பின்னர், வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது. காந்தியடிகள் காவலர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான விருது ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின், வழங்குவார். அதைத் தொடர்ந்து, அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெறும்.

கலை நிகழ்ச்சிகள்: கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை, ராஜஸ்தானின் குல்பாலியா நடனம், மகாராஷ்டிராவின் கோலி நடனம், அசாமின் பாகுரும்பா நடனம், தமிழகத்தின் கரகாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, காமராஜர் சாலை பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனை, பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில், விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் தேநீர் விருந்து: குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆளுநர் ஆர்.என்,ரவி அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே, ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதில்லை என்று திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x