ஜெயலலிதா நினைவிடத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்: நிரந்தர கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படுமா?

ஜெயலலிதா நினைவிடத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்: நிரந்தர கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படுமா?
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தொடர்ந்து மக்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமை யில் 200-க்கும் மேற்பட் டோர் நேற்று வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அவரது உடல் 6-ம் தேதி எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வெளியூர்களிலிருந்து பஸ்கள், வேன்கள் மூலமும் குடும்பம், குடும்பமாக வந்து செல்கின்றனர். ஏராளமான பொதுமக்கள் பூ வாங்கி வந்து வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மொட்டை அடித்துக் கொண்டு செல்கின்றனர்.

இலவச உணவு

இங்கு வரும் பொது மக்களுக்கு இலவசமாக உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல், கிச்சடி, புளியோதரை, எலுமிச்சை, தக்காளி சாதம், தோசை, சப்பாத்தி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் நினைவிடம் அருகே புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இதுதவிர தனியார் கேமரா ஆட்கள் மூலமும் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். ஒரு புகைப்படத்துக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கிடையே, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மூத்த நிர்வாகி பாலகங்கா ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற் பட்டோர் நேற்று ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். வரும் 24-ம் தேதி எம்ஜிஆர் நினைவு நாள் என்பதால், அங்குள்ள எம்ஜிஆர் கண்காட்சி மற்றும் வளாகத்தில் நடக்கும் பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். நடிகர்கள் ராமராஜன், குண்டு கல்யாணம், மனோபாலா உட்பட பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் அவதி

இங்கு போதிய கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள் அவதியடைகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் சிலரிடம் கேட்ட போது, ‘‘எம்ஜிஆர் நினைவிடத்திலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த வளா கத்தில் குடிநீர் வசதி உள்ளது. ஆனால், போதிய கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள தற்காலிக கழிப்பிடம் போது மானதாக இல்லை. எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த வளாகத்தில் நிரந்தரமாக கழிப்பிட வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in