

சென்னை: பொறுப்புள்ள வாக்களிப்பு, அதிக வாக்கு சதவீதம் மூலம் தமிழகத்தை தனித்துவம் நிறைந்த மாநிலமாக உருவாக்குவோம் என்று தேசிய வாக்காளர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.
தேசிய வாக்காளர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக தேர்தல் துறை சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, சென்னை சிறுமலர் காதுகேளாதோர் பள்ளி மாணவிகளின், வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான ‘ஊமைக் கூத்து - மைம்’ நிகழ்ச்சியும், தொடர்ந்து, ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து, இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தொடர்பாக சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவ, மாணவியரின் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பில் சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை ஆளுநர் வழங்கினார். தொடர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது:
தேர்தல், வாக்குப்பதிவு என ஜனநாயக நடைமுறையின் ஆணிவேராக இருக்கும் வாக்காளர்களிடம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். தேர்தல் ஆணையத்தின் கடுமையான உழைப்பு மற்றும் வெளிப்படையான செயல்பாடுகளால்தான் அதன் மீது அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் உட்பட, பல்வேறு பகுதிகளில் ஒருசில வீடுகள் உள்ள பகுதிகளுக்கும் முழுமையான தேர்தல் அலுவலர்களையும், இயந்திரங்களையும் கொண்டு சென்று அங்குள்ளவர்களையும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்கிறது. இதன்மூலம், தேர்தல் ஆணையம் இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதுடன், பல்வேறு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின் றன. இதனால் வாக்குப்பதிவும் தற்போது அதிகரித்துள்ளது. மேலும், கடந்த சில தேர்தல்களாக புதிய போக்கை காண முடிகிறது. குறிப்பாக பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக விளங்குகிறது. தற்போது 70 சதவீதமாக உள்ள வாக்குப்பதிவு 85 அல்லது 90 சதவீதமாக உயர வேண்டும்.இதற்கு அனைவரும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும். பொறுப்புள்ள வாக்களிப்புடன், அதிக வாக்கு சதவீதம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்குவோம். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மாநில தேர்தல் ஆணையர் வி.பழனிகுமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.