Published : 26 Jan 2023 06:51 AM
Last Updated : 26 Jan 2023 06:51 AM
திருவாரூர்: அரியலூர் மாவட்டம் வாரணவாசி பகுதியில் சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கருவிகள் தொடர்பான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை பேராசிரியர் கூறினார்.
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பயிலும் மாணவர்கள் 40 பேர், துறைப் பேராசிரியர் ரவி தலைமையில் அண்மையில் அரியலூர் மாவட்டம் வாரணவாசி, அரசு சிமென்ட் ஆலை, சாத்தனூர் ஆகிய பகுதிகளில், தொல்பொருள் படிமங்கள் குறித்த சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான படிமங்களை பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டதுடன், தொல்பொருள் ஆய்வு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் கல்வெட்டியல் துறை பேராசிரியர் ரவி கூறியதாவது: அரியலூர் பகுதியில் உள்ள அரசு சிமென்ட் ஆலை பகுதியில் சேகரிக்கப்பட்ட தொன்மை வாய்ந்த கற்களில் கடல் நட்சத்திர மீன்கள் இருந்ததற்கான தடயங்கள் குவியல் குவியலாக கிடைக்கின்றன. வாரணவாசியில் சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கருவிகள் தொடர்பான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று கால நாகரீக மனிதர்கள் இரும்பை உருக்கி பயன்படுத்தியதற்கான இரும்பு கசடுகளும் கிடைத்தன. அத்துடன், அந்தப் பகுதி கடற்கரையாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கான தடயங்களும் இருந்தன.
இவற்றை மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை மாணவர்கள் சேகரித்து தொடர் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். உலக புவியியல் வல்லுநர்களும், ஆராய்ச்சியாளர்களும் அரியலூர் பகுதியை ஆய்வுக்கு உரிய களமாக பயன்படுத்தினால் பண்டைக்கால நாகரிகங்கள், மனித சமூகத்தின் வரலாறு போன்ற பல்வேறு உண்மைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனை உலக புவியியல் வல்லுநர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT