

மேட்டுப்பாளையம்: காரமடை செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
கறிவேப்பிலை சாகுபடி, சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பங்குதாரர் கூட்டம், மேட்டுப்பாளையத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் காரமடை வட்டாரத்தில் விளையக்கூடிய செங்காம்பு கறிவேப்பிலை சாகுபடி செய்வது குறித்தும், அதனை பதப்படுத்தி கறிவேப்பிலை பொடி, எண்ணெய் என மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டது.
தோட்டக்கலை, உணவு பாதுகாப்புத்துறை, பெங்களூர் இந்திய தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு கறிவேப்பிலை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வழங்கினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசும்போது, ‘‘காரமடை செங்காம்பு கறிவேப்பிலைக்கு தனி மகத்துவம் உண்டு.மனித உடலுக்கு தேவையான பல சத்துக்கள் மட்டுமின்றி இதன் சுவையும் மணமும் அதிகம். ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. இதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
காரமடை செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும். தமிழ்நாட்டில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டுள்ள மொத்தமுள்ள 2,540 ஹெக்டேர் பரப்பளவில் காரமடை வட்டாரத்தில் மட்டும் 1240 ஹெக்டேர் கறிவேப்பிலை விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஏறத்தாழ 60 சதவீதத்துக்கு மேல் பயிரிடப்பட்டுவரும் காரமடை கறிவேப்பிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரி செய்ய மத்திய மாநில அரசு திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,’’ என்றார்.