வாழ்க்கை முறை மாற்றத்தால் கல்லீரல் நோய் அதிகரிப்பு: டேங்கர் அறக்கட்டளை ஆண்டு விழாவில் உறுப்பு மாற்று மருத்துவ நிபுணர் கருத்து
சென்னை: தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை (TANKER) சார்பில் 30-வதுஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
விழாவின் தொடக்கத்தில் நடைபெற்ற எஸ்.வி.வெங்கடேசன் மற்றும் மாலதி வெங்கடேசன் நினைவுகருத்தரங்கில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கோமதிநரசிம்மன் பங்கேற்றுப் பேசும்போது, ``தமிழகத்தில் அண்மைக் காலமாக கல்லீரல் பாதிப்பு நோய்அதிகரித்து வருகிறது.
சென்னையில் நான் சிகிச்சை அளித்த நோயாளிகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரைவாழ்க்கை முறை மாற்றம் மற்றும்உணவு முறை மாற்றம் காரணமாகஏற்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 24 சதவீதமாக இருந்தது. இது 2015-19 வரையிலான காலகட்டத்தில் 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் உயர வாய்ப்புள்ளது'' என்றார்.
பின்னர் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், `தி இந்து' குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி பங்கேற்று, சிறுநீரக நோய் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இளம் மருத்துவர் விருதை மனிஷ் ரமேஷ் பால்வானிக்கும், சிறுநீரக நோய் மருத்துவர்களில் தனித்துவமாக சிகிச்சை அளித்த மருத்துவர் விருதை விவேக் குட்டேவுக்கும், சிறுநீரக நோய் விழிப்புணர்வில் சிறந்து விளங்கியதற்கான விருதை மஞ்சுளா கல்யாணுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருதை மருத்துவர் தன்மயி தாஸுக்கும் வழங்கினார். பின்னர் விழாவில் மாலினி பார்த்தசாரதி பேசியதாவது:
சிறுநீரகம் உடல் வளர்சிதை மாற்றத்துக்கு மட்டுமல்லாமல், உடலில் உள்ள கழிவுகளை அகற்றி ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்தியாவில் சிறுநீரக நோய், பொது சுகாதாரத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்தநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆராய்ச்சிகள், விழிப்புணர்வு உள்ளிட்ட வளங்கள் பொது மற்றும்தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார்.
விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு, முன்னாள் டிஜிபி ஜெயந்த்முரளி, அறக்கட்டளை நிறுவனர்ஜார்ஜ் ஆபிரகாம், நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி, அறங்காவலர் லதா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
