

புதுச்சேரி: பாகூர் மின்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மின்துறையின் பிரிபெய்ட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் பொது மக்கள் புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரி அடுத்த பாகூர் மின்துறை அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. நுகர்வோர் குறைதீர் அவைத் தலைவர் கோ பாலகிருஷ்ணன், உறுப்பினர் ஜிஜேந்திர், கிருஷ்ணமூர்த்தி செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பழைய மின் ஒயர்கள் பழுதடைந்து உள்ளது, அதனை புதுப்பித்து புதிய மின் ஒயர்களை அமைக்க வேண்டும். பெரும்பாலான தெருகளில் மின்விளக்குகள் எரியவில்லை. அதனை ஊழியர்கள் சரி செய்ய வேண்டும். மின்துறையில் கிராமப்புற பகுதியில் ஊழியர்கள் பற்றாக் குறை தொடர்ந்து நீடித்து வருகிறது, அதனை நிரப்ப வேண் டும்.
இளநிலை பொறியாளர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது வரை அந்த இளநிலை பொறியாளர் இடம் காலியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் புகார் அளிக்க முடியவில்லை. விரைந்து இளநிலை பொறியாளர் இடத்தை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அப்போது சிலர் தற்போது புதிதாக பிரிபெய்ட் திட்டம் கொண்டு வர உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படையவர்கள். எனவே பிரிபெய்ட் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளித்தனர். ‘இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இதுதொடர்பான புகாருக்கு வேறொரு அமைப்பிற்கு அணுகலாம்’ என்று அதிகாரிகள் பதில் அளித்தனர்.
அதற்கு பொதுமக்கள், “மின்துறை அலுவலக சம்பந்தமான கூட்டம் தானே இது! பிரிபெய்ட் திட்டத்தால் பொதுமக்கள் நாங்கள் தான் பாதிக்கப்படுவோம், நீங்கள் இல்லை. பிரிபெய்ட் திட்டத்துக்கான எதிர்ப்பு மனுவை நீங்கள் பெற்றுக் கொண்டு, அதற்கான ரசீதை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் அந்த மனுவை பெற்றுக் கொண்டனர்.