Published : 26 Jan 2023 04:10 AM
Last Updated : 26 Jan 2023 04:10 AM

வேங்கைவயல் விவகாரம் - காலம் கடத்தவே சிபிசிஐடிக்கு மாற்றம்: சீமான் கருத்து

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மக்களை நேற்று சந்தித்து பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நேற்று அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், பெருமாநாட்டில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: கமல்ஹாசனின் ரத்தத்தில் அணுக்கள் தான் ஓட வேண்டும். தேவையில்லாமல் காங்கிரஸ் எல்லாம் ஓடக்கூடாது. ஆகையால், அவர் தனது ரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் திமுக நல்லாட்சி கொடுத்திருந்தால், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் அமைச்சர்களை ஏன் குவிக்க வேண்டும்? வாக்காளர்களுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? மக்கள் எங்களுக்கு முழுமையான வெற்றியைத் தரும் வரை தனித்துத்தான் போட்டியிடுவோம்.

கருணாஸ், தனியரசு, வேல்முருகன் போன்றவர்கள் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம். ஆனால், விவசாயி சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினையை காலம் கடத்து வதற்காகத் தான் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஓட்டு வங்கி அரசியலுக்காக திட்டமிட்டே தமிழக அரசு குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம்தாழ்த்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என பிற கட்சிகளை திருமாவளவன் குற்றம் சுமத்தக் கூடாது. ஏனெனில், நடவடிக்கை எடுக்காத திமுக அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அவர் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x