அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை பிப்.8-க்குள் இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கோயில்களில் அறங்காவலர்கள் பணிக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பதாரரின் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியையும் சேர்க்க வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டது. பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அறங்காவலரகள் பணிக்கான விண்ணப்பங்களை இணையதளஙகளில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை முடிக்க அவகாசம் வழங்கப்படும். மேலும், 10 மாவட்டங்களில் அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட வாரியான தேர்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீதமுள்ள 29 மாவட்டஙகளில் விரைவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 8-ம் தேதிக்குள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கே தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in