Published : 25 Jan 2023 07:44 PM
Last Updated : 25 Jan 2023 07:44 PM

அறநிலையத் துறைக்கான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம் விளக்கம்

கோப்புப்படம்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் நிதியை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், கோயில் நிதியில் அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும், கணினிமயமாக்கவும், பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் பயன்படுத்தப்படுவதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சமர்ப்பித்தார்.

மேலும், கோயில்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படும் நிலையில், கோயில் நிதியை அறநிலையத்துறைக்காக பயன்படுத்தப்படுகிறது. எந்த தயக்கமும் இல்லாமல் கோயில் நிதியை அரசு நிதி போல பயன்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சிறப்பு தணிக்கை செய்தால் அனைத்து தகவல்களும் அம்பலமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிதியை, தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. அறநிலையத் துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்து செலவழிக்க வேண்டும். அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது. கண்காணிப்பு என்ற பெயரில் கோயில் வளங்களை எடுக்க முடியாது எனக்கூறி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x